பக்கம்:மணி பல்லவம் 1.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


16. திரைமறைவில் தெரிந்த பாதங்கள்

சித்திரச்சாலைக்குள் அந்த எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத தனிமை நிலையில் இளங்குமரனுடைய படத்துக்கு முன்னால் தன் தந்தைக்கும் ஓவியனுக்குமிடையே நிகழும் பேச்சு என்னவாயிருக்கும் என்பதை அறிந்து கொண்டு விடுவதற்குத் தன்னால் ஆனமட்டும் முயன்றாள், படியோரத்தில் மறைந்து நின்றுகொண்டிருந்த சுரமஞ்சரி. தன் செவிகளின் கேட்கும் ஆற்றலை எவ்வளவுக்குக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்க முடியுமோ அவ்வளவுக்குக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்க முயன்றாள் அவள். சற்றுமுன் நிலா முற்றத்தில் இருந்தபோது தென்றலையும், பால் மழை பொழிவது போல் வெண்மதி தவழும் வானத்தையும், தன் சகோதரியின் இன்னிசையையும் எண்ணி எண்ணி இன்பத்தில் மூழ்கினவளாய் அந்த இனிமை நினைவுகளின் எல்லையாய் இளங்குமரன் என்னும் பேரினிமை நினைவில் திளைத்து மகிழ்ந்த சுரமஞ்சரி இப்போது சித்திரச்சாலையின் படியருகே அச்சமும் திகைப்பும் கொண்டு நின்றாள். என்னென்னவோ நிகழக் கூடாதனவும் நிகழத் தகாதனவுமாகிய நிகழ்ச்சிகள் நிகழத் தொடங்கி விட்டாற்போல் அவள் மனத்துள் ஒருவிதமான திகில் சூழ்ந்தது. வெள்ளை விழியும் கருவட்டமுமாகப் பிறழ்ந்து பிறழ்ந்து கொள்ளையழகோடு பார்க்கும் அவளுடைய மைதீட்டிய நளின நயனங்கள் இப்போது பயத்தால் மிரண்டு விரிந்தன.

பெருமுயற்சி செய்தும் தந்தையாரும் ஓவியனும் பேசிக் கொண்டதை அவள் முற்றிலும் அறிய இயலவில்லை. சில சில சொற்கள்தாம் இடையிடையே கேட்க முடிந்தன. ஆனால் அவள் நின்றுகொண்டு பார்த்த இடத்திலிருந்து தந்தையின் விலாப்புறமும் ஓவியனின் முன்தோற்றமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/124&oldid=1149482" இலிருந்து மீள்விக்கப்பட்டது