பக்கம்:மணி பல்லவம் 1.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

135

முளைப்பது போல் வேல்கள் சிறிது சிறிதாக நீண்டது. இரண்டு பக்கத்திலும் முன்னும் பின்னும் சிறிது தொலைவு வரையில் அணிவகுத்து நீட்டினாற்போல் நீளும் வேல்களைக் கண்டு தீயை அணைக்கும் முயற்சிக்காகத் தாம் முன் செல்லலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றார் அவர். தீயை அணைப்பதற்காக அவர் முன் சென்றால் அப்படிச் செல்லவிடாமல் அவரைத் தடுப்பது அந்த வேல்களுக்கும், அவற்றுக்குரியவர்களுக்கும் நோக்கமாக இருக்கும் போல் தோன்றியது.

தீயும் இப்போது அவர் ஒருவரே தனியாக அணைத்து விட முடியும் என்ற நிலையில் இல்லை. அங்கு வீசிக் கொண்டிருந்த பெருங்காற்றின் துணையும் சேர்ந்து விட்டதனால் தீ கொண்டாட்டத்தோடு பரவியிருந்தது. அனல் பரவியதனால் அருகிலிருந்த மரங்களிலிருந்து பல்வேறு பறவைகள் விதம் விதமாகக் குரலெழுப்பிக் கொண்டு சிறகடித்துப் பறந்தன. ஓலைக் கீற்றுக்கள் எரியும் ஒலியும், இடையிடையே இணைக்கப் பெற்றிருந்த மூங்கில்கள் தீயில் வெடித்து முறியும் சடசடவென்ற ஓசையும் அவர் செவிகளில் உற்றன. அந்தக் கோரக் காட்சியைக் கண்டுகொண்டே ஒன்றும் செய்ய இயலாமல் நின்றிருப்பது அவருக்கு வேதனையாகத்தான் இருந்தது. ஆயினும் ஒன்றும் செய்வதற்கு விடாமல் அந்த வேல்கள் வியூகம் வகுத்து அவரைத் தடுத்துக் கொண்டிருந்தன.

தீ மிகப் பெரிதாக எழுந்து தவச்சாலைக்கு மேலே வானம் செம்மையொளியும் புகையும் பரவிக் காட்டியதால் அந்த வனத்தின் பல பகுதிகளில் இருந்த வேறு மடங்களையும், மன்றங்களையும் தவச்சாலைகளையும் சேர்ந்தவர்கள் பதறி ஓடிவந்து கொண்டிருந்தனர். தீ வனம் முழுவதும் பரவிவிடக் கூடாதே என்ற கவலை அவர்களுக்கு. அன்றியும் தீப்பற்றியிருக்கும் இடத்தில் யாராவது சிக்கிக் கொண்டிருந்தால் முடிந்தவரையில் முயன்று காப்பாற்ற முனையலாம் என்று கருணை நினைவோடு ஓடிவந்து கொண்டிருந்தவர்களும் இருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/136&oldid=1141813" இலிருந்து மீள்விக்கப்பட்டது