பக்கம்:மணி பல்லவம் 1.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

137

வதற்கில்லை. அந்தப் பரபரப்பான சூழ்நிலையில், ‘நெருப்பு மூட்டியது தாமில்லை’ என்று மறுப்பதற்கும் அவரிடம் போதிய சான்றுகள் இல்லை. ஓடிவருகிற அக்கம்பக்கத்தார் காலடி ஓசை மிகவும் நெருங்கிக் கொண்டிருந்தது.

தீரச் சிந்தித்தபின் அப்போதுள்ள சூழ்நிலையில் தாம் செய்யக்கூடிய ஒரே நல்ல காரியம் ‘அங்கிருந்து மெதுவாக நழுவிச் சென்றுவிடுவதுதான்’ என்ற முடிவுடன் கீழே குத்திக் கொண்டு நின்ற தம் வேலை எடுத்துக் கொண்டு மரஞ்செடி கொடிகளின் மறைவில் பதுங்கி நடந்தார் வளநாடுடையார். ஆனால் அங்கு நின்று கொண்டிருப்பது எப்படித் தவறான அநுமானத்துக்கு இடங்கொடுத்துத் தம்மேல் பழி சுமத்தப்படக் காரணமாகும் என்று அவர் பயந்தாரோ, அப்படிப் பயந்தது அவர் சென்று கொண்டிருக்கும்போதே நடந்துவிட்டது. ஓடிவந்து கொண்டிருந்தவர்களில் யாரோ ஓரிருவர் மறைந்து பதுங்கிச் செல்லும் அவருடைய உருவத்தைப் பார்க்க நேர்ந்து விட்டதனால், ‘தீ வைத்தவன் அதோ ஓடுகிறான்! விடாதீர்கள் பிடியுங்கள்’ என்று பெருங்குரல் எழுந்தது. உடனே வந்த கூட்டத்தில் ஒரு பகுதி அவர் சென்று கொண்டிருந்த பக்கம் திரும்பிப் பாய்ந்து அவரைத் துரத்தத் தொடங்கியது. எந்தப் பழிக்காக அவர் அங்கு நிற்கப் பயந்து சென்றாரோ, அந்தப் பழி தம்மைத் துரத்திக் கொண்டே வந்து விட்டதே என்று தெரிந்த போது துரத்துபவர்களிடம் அகப்படாமல் ஓடத் தொடங்குவதைத் தவிர வேறு வழி அவருக்கும் தோன்றவில்லை. கால்கள் சென்ற போக்கில் முதுமையில் ஏலாமையையும் பொருட்படுத்தாமல் ஓடலானார் அவர். பின்னால் துரத்திக் கொண்டு வந்தவர்கள் ஆத்திரத்தில் வீசி எறிந்த கற்களும், கட்டைகளும் அவர்மேல் விழுந்து சிராய்த்து இரத்தம் கசியச் செய்தன. அவருக்கும் அவரைத் துரத்தியவர்களுக்கும் இடையே அந்த முன்னிரவு நேரத்தில் சக்கரவாளக் கோட்டத்தை ஒட்டிய காட்டுக்குள் ஒரு பெரிய ஓட்டப்பந்தயமே நடந்து கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/138&oldid=1141817" இலிருந்து மீள்விக்கப்பட்டது