பக்கம்:மணி பல்லவம் 1.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

மணிபல்லவம்

உடையாரே! பின்பு நன்மை பயப்பதற்குக் காரணமான பொய்யும் மெய்தான்! நீங்கள் செய்யப் போகும் இந்தச் சத்தியத்தினால் இரண்டு உயிர்களைக் காப்பாற்றும் புண்ணியத்தை அடைகிறீர்கள்...”

மறுபேச்சுப் பேசாமல் முனிவருடைய வலது கையில் தமது வலது கையை வைத்து ‘மண்மகள் விண்மகள் சாட்சியாக முனிவர் உயிரோடிருக்கும் மெய்யைக் கூறுவதில்லை’ என்று சத்தியம் செய்து கொடுத்தார் வீரசோழிய வளநாடுடையார். அதைக் கேட்டு முனிவர் முகம் மலர்ந்தது.


19. நீலநாக மறவர்

ளங்குமரனும், நண்பர்களும் மருவூர்ப் பாக்கத்தின் ஒரு புறத்தே அமைந்திருந்த நீலநாக மறவரின் படைக்கலச் சாலைக்குள் நுழைந்தபோது அங்கே ஆரவாரமும் சுறுசுறுப்பும் நிறைந்த சூழ்நிலை நிலவியது. பல இளைஞர்கள் தனிதனிக் குழுக்களாகவும் வேறு வேறு பகுதிகளாகவும் பிரிந்து வாட்போர்ப் பயிற்சியும், விற்போர், மற்போர்ப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டிருந்தார்கள். வாளோடு வாள் மோதும் ஒலியும், வேல்கள் சுழலும் ஓசையும், வில்லிலிருந்து அம்புகள் பாயும் விரைந்த ஒலியும், இளைஞர்களின் ஆரவாரக் குரல்களும் நிறைந்த படைக்கலச் சாலையின் பயிற்சிக்களமே சிறியதொரு போர்க்களம் போல் காட்சியளித்தது. இடையிலேயே படைக்கலச் சாலைத் தலைவராகிய நீலநாக மறவரின் கம்பீரமான சிங்கக் குரல் முழங்கி, வீரர்களை ஏவுதல் செய்தும் ஆணையிட்டும் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தது. முழங்கி முடிந்த பின்பும் நெடுநேரம் ஒலித்துக் கொண்டேயிருப்பது போலக் கட்டளையிடும் கம்பீரத் தொனியுள்ள குரல் அது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/145&oldid=1141824" இலிருந்து மீள்விக்கப்பட்டது