பக்கம்:மணி பல்லவம் 1.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

மணிபல்லவம்

கற்பிக்க முடிந்தவராக அவர் ஒருவர்தான் இருந்தார். பயங்கரமானதும், பெருந் துணிவுடன் பொறுத்துக் கொண்டு செய்ய வேண்டியதுமான போர்த்துறை ஒன்றுக்கு ‘நூழிலாட்டு’ என்று பெயர். தன்னிடம் போர்க் கருவிகளே இல்லாத போதும் எதிரி தன்னை நோக்கி எறிகிற வேலையே தன் ஆயுதமாகப் பறித்துக் கொண்டு அதனால் தன்னைச் சூழ்கிற பல பகைவர்களைத் தாக்கி அழிக்க வேண்டும். எதிரியின் வேல் தன் மார்பிலே தைத்துள்ளதாயினும் தனக்கு வலியுண்டாகுமே என்று தயங்காமல் அதை உருவியேனும் எதிரிகளைச் சாடி அழிப்பதுதான் நூழிலாட்டு. பல போர்க்களங்களில் தூழிலாட்டுப் புரிந்து அந்த அருங்கலை விநோதத்தையே விளையாட்டாகப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார் நீலநாக மறவர்! ‘வல்வில் வேட்டம்’ என்று வில்லில் அம்பெய்வதில் நுணுக்கமான நிலை ஒன்று உண்டு. ஒரே முறையில் விரைந்து எய்த அம்பு ஒன்று பல பொருள்களிற் பாய்ந்து எல்லாவற்றையும் துளைத்துச் செல்லுமாறு எய்துவதற்குத்தான் ‘வல்வில் வேட்டம்’ என்று பெயர். இப்படி அரியனவும், பெரியனவுமாக இருந்த போர்க்கலை நுணுக்கங்கள் யாவும் பழகிப் பயின்று வைரம் பாய்ந்த கரங்கள் நீலநாக மறவருடையவை.

இல்லற வாழ்வின் மென்மையான அனுபவங்களும், உலகியற் பழக்கங்களும் இல்லாத முரட்டு வீரராக வளர்ந்திருந்ததனால் உணவிலும் நடைமுறைகளிலும், உடம்பைப் பேணுதலிலும் பொதுவான மனித இயல்பை மீறியவராக இருந்தார் அவர். ஐம்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்து தளர்ந்ததென்று சொல்ல முடியாத கட்டுடல், செம்பினை உருக்கி வார்த்து நிறுத்திய சிலையெனத் தோன்றியது. எட்டிப்பால், எட்டிக்காய் போன்றவற்றை உண்டு வழக்கப்படுத்திக் கொண்டிருந்ததால் உடம்பில் நச்சுத் தன்மை ஏறி இறுகியிருந்தது. எனவே நஞ்சு தோய்ந்த ஆயுதங்களோ, நச்சுப் பிராணிகளோ எந்த விதமான கெடுதலும் செய்ய முடியாதபடி உறுதிப்படுத்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/151&oldid=1141834" இலிருந்து மீள்விக்கப்பட்டது