பக்கம்:மணி பல்லவம் 1.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

153

எறிந்துவிட்டு முகமலர்ச்சியோடு இளங்குமரனை நோக்கி நடந்து வந்தார்.


20. விளங்காத வேண்டுகோள்

“அடடா, நீ எப்பொழுது வந்தாய் தம்பீ! நான் உன்னைக் கவனிக்கவேயில்லையே? காலையிலிருந்து உன்னைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேற்றுப் பின்னிரவில் இந்திர விழாவைக் காண்பதற்காக ஊரெல்லாம் சுற்றிவிட்டு இதோ உன்னுடன் நிற்கும் இந்த இளைஞர்களிற் சிலர் இங்கு வந்து தங்கினார்கள். இன்று காலையில் இவர்களிடம் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது பிற்பகலுக்குள் நான் உன்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி அனுப்பினேன். உன்னிடம் நிறையப் பேச வேண்டியிருக்கிறது தம்பீ! நேற்று முன்தினம் அருட்செல்வ முனிவர் இங்கு வந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். உன்னைப் பற்றி எவ்வளவோ செய்திகளைச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார் அவர்.”

அன்பு நெகிழும் குரலில் இவ்வாறு கூறிக்கொண்டே இரும்புக்கவசம் அழுத்துமாறு அவனை மார்புறத் தழுவிக் கொண்டார் நீலநாக மறவர்.

“முகம் வாடியிருக்கிறதே தம்பீ! எதற்காக இப்படி ஊர் சுற்றுகிறாய்? உன்னுடைய அழகும், ஆற்றலும், அறிவும் பெரிய காரியங்களுக்குப் பயன்பட வேண்டும்; அவற்றை இப்போதே மிகச் சிறிய காரியங்களுக்காகச் செலவழித்து விடாதே! இன்றைக்கு இந்தப் பூம்புகாரின் அரச கம்பீர வாழ்வுக்கு முன்னால், இருக்குமிடம் தெரியாத மிகச் சிறிய இளைஞனாக நீ இருக்கிறாய். இனி ஒரு காலத்தில் உன்னுடைய கம்பீரத்துக்கு முன்னால் இந்தப் பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/154&oldid=1141840" இலிருந்து மீள்விக்கப்பட்டது