பக்கம்:மணி பல்லவம் 1.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

மணிபல்லவம்

நகரமே இருக்குமிடம் தெரியாமல் மிகச் சிறியதாகப் போய் விடலாம். உலகமே அப்படித்தான் தம்பீ! பொருள்கள் பெரியவைகளாகத் தோன்றும்போது வியந்து நிற்கிற மனமும் மனிதனும் குறுகியிருப்பதைப்போல் சிறுமையாய்த் தோன்றுவார்கள். மனத்தையும் தன்னையும் பெரியதாகச் செய்து கொண்டு பார்த்தால் இந்த உலகத்தில் மிகப் பெரும் பொருள்களும் சிறியவையாகக் குறுகித் தோன்றும். இதோ, என்னைச் சுற்றிக் கட்டிளம் காளைகளாக நிற்கும் இந்தப் பிள்ளைகள் எல்லோரும் வில்லுக்கும் அம்புக்கும் தோற்றுக் கல்லைப்போல் அசைவின்றிப் பயந்து நிற்கிறார்களே; ஏன் தெரியுமா? இவர்கள் அந்தக் குறி தங்களுடைய ஆற்றலிலும் பெரிது என்று எண்ணி எண்ணித் தங்களுக்குத் தாங்களே சிறுமை கற்பித்துக்கொண்டு விட்டார்கள். அதனால் அம்பு குறியைத் தீண்டவே இல்லை. வீரம் தனக்குப் பயந்த நெஞ்சில் விளைவதில்லை. தன்னை நம்பும் நெஞ்சில்தான் விளைகிறது. எங்கே பார்க்கலாம்? நீ இந்த வில்லை எடுத்து இவர்கள் செய்யத் தவறியதைச் செய்துகாட்டு. அதன் பின்பாவது இவர்கள் மனத்தில் தன்னம்பிக்கை உண்டாகிறதா இல்லையா என்று காணலாம்!”

என்றிவ்வாறு கூறியபடியே இளங்குமரனை முன்னுக்கு இழுத்துக் கொண்டு வந்து வில்லையும் அம்புக் கூட்டையும் அவன் கைகளில் எடுத்துத் தந்து அன்புடன் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் நீலநாக மறவர். எல்லாருடைய கண்களும் அவனையே பார்த்தன. வந்ததும் வராததுமாக இளங்குமரனை இப்படி வம்பில் இழுத்து விட்டாரே நீலநாக மறவர் என்று கதக்கண்ணன் நினைத்தான். அப்போது இளங்குமரன் மனநிலை தெளிவாயில்லை என்பதை அறிந்திருந்த காரணத்தால் தான் கதக்கண்ணன் பயந்து தயங்கினான். மனக்கவலைகளால் எல்லோரையும் போல இளங்குமரனும் குறி தவறி ‘அவமானப்பட நேரிட்டு விடுமோ’ என்பதே கதக்கண்ணனின் பயத்துக்குக் காரணமாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/155&oldid=1141908" இலிருந்து மீள்விக்கப்பட்டது