பக்கம்:மணி பல்லவம் 1.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

155

ஆனால் கதக்கண்ணன் பயந்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. எப்படிப்பட்ட கவலைக்கிடமான நேரத்திலும் தன் மனத்தையும் கண்களையும் ஒருமை நிலையில் ஈடுபடுத்த முடியும் என்பதை இளங்குமரன் நிரூபித்துக் காட்டிவிட்டான். ஒரே ஒரு விநாடிதான்! அந்த ஒரு விநாடியில் வில்லை வளைப்பதற்குப் பயன்பட்ட நேரம் எவ்வளவு, நீர்ப்பரப்பில் தெரிந்த காய்களின் பிரதி பிம்பத்தைக் கவனித்துக் குறிபார்த்த நேரம் எவ்வளவு, அம்பை எய்த நேரம் எவ்வளவு என்று தனித்தனியே பிரித்துச் சொல்லவே முடியாது. அவனுடைய வில் வளைந்ததையும் மாங்காயின் கொத்து அறுந்து தனித்தனிக் காய்களாய் நீரிலும், தரையிலுமாக வீழ்ந்ததையும்தான் எல்லாரும் கண்டார்கள்.

“வில்லாதி வில்லன் என்பது உனக்குத்தான் பொருத்தமான பெயர், தம்பீ! உன்னுடைய அம்புகள் மட்டுமல்ல. நினைவுகளும், நோக்கமும், பேச்சும் எதுவுமே குறி தவறாது” என்று கூறியவாறு இளங்குமரனைச் சிறுகுழந்தை போல் விலாவில் கைகொடுத்துத் தழுவி, அப்படியே மேலே தூக்கிவிட்டார் நீலநாக மறவர். கூடியிருந்த இளைஞர்களிடமிருந்து வியப்பு ஒலிகளும் ஆரவாரமும் எழுந்தன.

இளங்குமரன் அவருடைய அன்புப் பிடியிலிந்து விடுபட்டுக் கீழே இறங்கியவுடன், “எல்லாம் நீங்கள் இட்ட பிச்சை ஆசிரியரே” என்று அவர் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றி வணங்கினான். அவர் கூறினார்.

“பிச்சையாகவே இருந்தாலும் அதைப் பாத்திரமறிந்து இட்டதற்காக நான் பெருமைப்படலாம் அல்லவா? நல்ல கொழுநனை அடைந்து கற்பும் பொற்பும் பெறுகிற அழகிய பெண் போல், ஒவ்வொரு கலையும் தன்னை நன்றாக ஆளும் நல்ல நாயகனைப் பெற்றால் தான் சிறப்படைகிறது தம்பி!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/156&oldid=1141909" இலிருந்து மீள்விக்கப்பட்டது