பக்கம்:மணி பல்லவம் 1.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

157

சென்ற மற்றவர்களும் இளங்குமரனைப் பற்றித் துச்சமாகச் சொல்லி நகை புரிந்ததையும் மரத்தடியில் உட்கார்ந்திருந்த கதக்கண்ணன் கேட்டுப் புரிந்து கொண்டு விட்டான். உடனே மனங்கொதித்துத் துள்ளி எழுந்தான் அவன். நேராக அந்த இளைஞர் குழுவுக்கு முன் போய் நின்றுகொண்டு இளங்குமரனை இகழ்ந்து பேசிய வேளிர்குலத்து விடலையைத் தடுத்து நிறுத்தி ஒரு கேள்வி கேட்டான் கதக்கண்ணன்.

“வேளிர்குலத்து வீரரே! தயை கூர்ந்து சற்றுமுன் கூறிய சொற்களை இன்னும் ஒருமுறை என் காது கேட்கும்படி கூறுவீர்கள் அல்லவா?”

கதக்கண்ணன் தன் முன்னால் பாய்ந்து வந்து தடுத்து நிறுத்திய விதத்தையும் கேள்வி கேட்ட வேகத்தையும் பார்த்து நிலைமையைப் புரிந்து கொண்டுவிட்டான் வேளிர்குலத்து வீரன்.

“நானா? நான் சற்று முன்பு தவறாக ஒன்றும் சொல்லவில்லையே. இளங்குமரனாரின் வீரதீரப் பெருமை களைத்தானே உடன் வருகிறவர்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்தேன்!” என்று பேச்சை மாற்றி மழுப்பிவிட முயன்றான் அவன். ஆனால் கதக்கண்ணன் அவனை விடவில்லை.

“அப்படியா? மிகவும் மகிழ்ச்சி. வஞ்சகமில்லாமல் பிறருடைய வீரதீரப் பெருமைகளை அவர்கள் இல்லாத இடத்திலும் சொல்லிப் புகழுகிற உங்களைப் போன்றவர்களுக்கு நான் ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.”

“ஆகா! நீங்கள் கொடுக்க ஆசைப்படும் பரிசை அவசியம் வாங்கிக் கொள்கிறேன், எனக்கு என்ன பரிசு தரப் போகிறீர்கள் நீங்கள்?”

“என்ன பரிசு என்றா கேட்கிறீர்கள்? சற்று முன் அப்படிப் பேசிய உங்கள் நாவை ஒட்ட இழுத்து அறுக்கலாமென நினைக்கிறேன். அதுதான் நான் உங்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/158&oldid=1141915" இலிருந்து மீள்விக்கப்பட்டது