பக்கம்:மணி பல்லவம் 1.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

161

அநாகரிகமாகத் திறந்து பார்த்திருக்க வேண்டாமே' என்று தவிக்கவும் நேரிடுமல்லவா?”

“அதெல்லாம் சரிதான் அம்மா ஆனால் செம்பஞ்சுக் குழம்பை வீணாக்கி விட்டீர்களே" என்றாள் வசந்தமாலை.

“ஆ! அப்படிக் கேள் வசந்தமாலை. அதில்தான் இரகசியமே அடங்கியிருக்கிறது. இந்தச் செம்பஞ்சுக் குழம்பு இரண்டு நாட்களுக்குச் சிவப்புக்கறை அழியாதென்று உனக்குத் தெரியுமோ இல்லையோ?” என்று சுரமஞ்சரி இதழ்களில் இளநகை அரும்பக் கேட்டவுடன் தான் வசந்தமாலைக்குத் தன் தலைவியின் தந்திரம் புரிந்தது. சமயத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற விதத்தில் புத்திக் கூர்மையுடனும் தந்திரமாகவும் சுரமஞ்சரி அந்த செயலைச் செய்திருக்கிறாள் என்பதை விளங்கிக் கொண்டபோது தன் தலைவியின் நுண்ணுணர்வை வசந்த மாலையால் வியந்து போற்றாமல் இருக்க முடியவில்லை.

“வசந்தமாலை! வா, சித்திரச்சாலைக்குள் போய்ப் பார்க்கலாம். சற்றுமுன் தந்தையாரும், ஓவியனும் அங்கே நின்று கொண்டிருந்தார்களே. அந்த ஓவியத்தில் அவர்கள் ஏதாவது மாறுதல் செய்திருக்கிறார்களா என்று பார்க்கலாம்”— என்று கூறித் தன் தோழியையும் உடன் அழைத்துக் கொண்டு சித்திரச்சாலைக்குள் புகுந்தாள் சுரமஞ்சரி. வண்ணங்குழைத்து வனப்பு வனப்பாய், வகை வகையாய்த் தீட்டி வைக்கப்பட்டிருந்த உயிரோவியங்கள் நிறைந்த அந்தச் சாலையில் நடை ஓசையும் கேட்காமல் மெத்தென்ற பட்டுக்கம்பள விரிப்பின் மேல் நடந்து போய் இளங்குமரனின் படத்துக்குமுன் ஆவலுடன் நின்றார்கள் அவர்கள். என்ன மாறுதல் நேர்ந்திருக்கிறதென விரைந்து அறியும் விருப்பத்துடன் தன் கூரிய நோக்கால் அந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியாக உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தாள் சுரமஞ்சரி. ஆனால் அவளையும் முந்திக் கொண்டு தோழிப்பெண் அந்த மாறுதலைக் கண்டு பிடித்துவிட்டாள்.

ம-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/162&oldid=1141935" இலிருந்து மீள்விக்கப்பட்டது