பக்கம்:மணி பல்லவம் 1.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

163

அந்த இரண்டு நாள் பழக்கத்தில் இளங்குமரனின் அவ்வளவு அன்பும், பரிவும், தன் மனத்துக்கு எப்படி உண்டாயிற்று என்பதை நினைத்தால் அவளுக்கே விந்தையாயிருந்தது. இளங்குமரன் அவளைப் போல் ஒரு பெண்ணின் மனத்தில் எழும் மென்மையான உணர்வுகளுக்கு உரிய மதிப்போ, நெகிழ்ச்சியோ அளிக்கத் தெரியாத முரடனாயிருந்தான். எடுத்தெரிந்து அலட்சியமாகப் பேசினான். தன்னுடைய விழிகளிலும், இதழ்களிலும், உள்ளத்திலும் அவனுக்காக நெகிழும் குறிப்புக்களோடு அவள் அருகே நெருங்கி நின்ற போதெல்லாம் அவன் அதைப் புரிந்து கொண்டு குழையும் மென்மைத் தன்மையில்லாமலே விலகி விலகிச் சென்றிருக்கிறான். ஆயினும் விலகவிலக அவனைப் பற்றி நெருக்கமாக நினைக்கத்தான் அவளால் முடிந்தது. அவனை விலக்கி நினைக்கும் ஆற்றல் அவள் மனத்துக்கு வரவில்லை. தான் பேரார்வத்தோடு அளித்த மணிமாலையை மறுத்ததிலிருந்து ஒவ்வொன்றாகத் தனக்கு அவன் செய்த அலட்சியங்களை நினைத்துப் பார்த்தும் அவளால் அவனை வெறுக்க முடியவில்லை. அந்த அலட்சியங்களின் கம்பீரத்தினாலேயே அவன் மீது பரிவும் கவர்ச்சியும் அதிகமாயிற்று அவளுக்கு. நிமிர்ந்து நிற்கும் அவனது திமிர் நிறைந்த தோற்றமும், பரந்து விரிந்த மார்பும் செம்பொன் நிறம் கிளரும் சுந்தரமணித் தோள்களும் கண் நிறைந்து தோன்றும் அழகு முகமும் நினைவில் தோன்றித் தோன்றி, ‘இவற்றையும் இவற்றுக்குரியவனையும், நீ இழக்கலாகாது பெண்ணே! இவனைப் பற்றி நினைப்பதே இன்பம், இவனைப் பற்றித் தவிப்பதே பெருமை, இவனால் அலட்சிப்படுத்தப் பெறுவதை ஏற்பதிலும்கூட இன்பம் இருக்கிறது’ என்று சுரமஞ்சரியை ஏங்கச் செய்திருந்தன. ஆசைகளுக்கு ஆசைப்படாமல் ஆசைகளை ஆசைப்பட வைக்கும் ஏதோ ஒரு தனித்தன்மை அவனிடமிருந்து அவளைக் கவர்ந்து ஆட்சி புரிந்தது. எதற்கும் அசைந்து கொடுக்காத அந்தத் தனித்தன்மையைத் தன் சிரிப்புக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/164&oldid=1141944" இலிருந்து மீள்விக்கப்பட்டது