பக்கம்:மணி பல்லவம் 1.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

மணிபல்லவம்

பெண்கள் உட்காரும் வரிசையில் சுரமஞ்சரியின் அன்னையும் மாளிகையைச் சேர்ந்த நற்றாய், செவிலித்தாய் முதலிய முது பெண்டிர்களும் அமர்ந்திருந்தார்கள். இந்த இளம் பெண்களின் கூட்டம் உள்ளே நுழைந்தவுடன் நெய்யும், பாலும், பணியாரமும், பல்சுவை மணம் பரப்பிக் கொண்டிருந்த உணவுக் கூடத்தில் மல்லிகை மணமும் கூந்தலில் பூசிய தைல மணமும், வேறுபல மென்மணங்களும் புதிதாக எழுந்து உணவு மணங்களோடு கூடிக் கலந்தன. தந்தையார், சுரமஞ்சரி முதலியவர்களை முகமலர்ச்சியோடு உற்சாகமாக வரவேற்றார்.

“வாருங்கள், பெண்களே! இன்று நமது மாளிகையில் நளபாகமே செய்திருக்கிறார்கள். இந்திர விழா உற்சாகத்தில் சமையற்காரர்கள் தங்கள் அற்புதத் திறமையைக் காட்டியிருக்கிறார்கள். இனிமேல் நாம் நமது உண்ணும் திறமையைக் காண்பிக்க வேண்டியதுதான்.”

“ஆகா! நமது மாளிகை உணவைப் பற்றியா இப்படிச் சொல்கிறீர்கள், அப்பா? என்ன அதிசயம்! என்னால் நம்பவே முடியவில்லை! ஏதாவது கைதவறிச் செய்திருப்பார்கள். அது நன்றாக வாய்த்துத் தொலைத்திருக்கும். நம் மாளிகைச் சமையற்காரர்கள் அற்புதத் திறமையையும், உற்சாகத்தையும் எப்படி அப்பா காட்டுவார்கள்? அவர்கள்தாம் இந்த மாளிகைக்குள் நுழையுமுன்பே அத்தகைய திறமையையும், உற்சாகத்தையும் எங்கோ தொலைத்துவிட்டு வந்து சேர்ந்திருக்கிறார்களே அப்பா!” என்று வானவல்லி வம்புப் பேச்சைத் தொடங்கினாள்.

அவள் கூறி முடித்ததும் பெண்களின் கிண்கிணிச் சிரிப்புக்கள் அந்தக் கூடத்தில் அலை அலையாய் ஒலி பரப்பி அடங்கின. சுரமஞ்சரியையும் வசந்தமாலையையும் தவிர மற்றவர்கள் யாவரும் இந்த நகைச்சுவை மகிழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். சுரமஞ்சரி, வானவல்லி ஆகியோரின் அன்னையும் இந்த மகிழ்ச்சியில் கலந்து கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/167&oldid=1141958" இலிருந்து மீள்விக்கப்பட்டது