பக்கம்:மணி பல்லவம் 1.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

மணிபல்லவம்

செய்து கூவியதிலிருந்து அவன் பெயர். இளங்குமரன் என்பது அங்கிருந்தவர்களுக்குத் தெரிந்தது. அவன் முகத்துக்கும் தோளுக்கும் பரந்த மார்புக்கும் தன் நெஞ்சையும், நினைவுகளையும் தோற்கக் கொடுத்த பட்டினப்பாக்கத்துப் பெருஞ் செல்வமகள் ஒருத்தி பல்லக்கிலிருந்தவாறே அந்தப் பெயரை இதழ்கள் பிரிய மெல்லச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள், அவள் இதழ் எல்லையில் அப்போது இளநகை விளையாடியது. நெற்றியிலும், கருநீல நெடுங் கண்களிலும், மாம்பழக் கன்னங்களிலும் நாணம் விளையாடியது. நெஞ்சில் பரவசம் விளையாடிக் கொண்டிருந்தது.

“வசந்தமாலை! எவ்வளவு அழகான பெயர் இது? நீ கேட்டாயல்லவா!” என்று பல்லக்கில் எதிரேயிருந்த தோழியை வினவினாள் அந்தச் செல்வ மகள்; தோழி பொருள் நிறைந்த நகை புரிந்தாள். இதற்குள் களத்தில் அந்த இளைஞனும் யவன மல்லனும் கைகலந்து போர் தொடங்கியதால் - எழுந்த ஆரவாரம் அவர்கள் கவனத்தைக் கவரவே, அவர்களும் களத்தில் கவனம் செலுத்தலாயினர். இவ்வளவு திறமையாக மற்போர் செய்யத் தெரிந்தவனா ‘இதுவரை ஒன்றுந் தெரியாதவனைப் போல் நின்று கொண்டிருந்தான்?’ என்று கூடியிருந்தவர்களை வியக்கச் செய்தது இளங்குமரன் என்று அழைக்கப்பட்ட அந்த இளைஞனின் வன்மை! மின்னல் பாய்வது போல் தன் பொன் நிறக் கரங்களை நீட்டிக் கொண்டு அவன் பாய்ந்து தாக்கிய போதெல்லாம் யவனமல்லனுக்கு விழி பிதுங்கியது. இளங்குமரனை உற்சாகமூட்டி அவனுடன் இருந்த இளைஞர்கள் கைகளை ஆட்டியவாறே ஆரவாரம் செய்து கூவினர்.

இந்தச் சமயத்தில் சித்திரப் பல்லக்கிலிருந்து பட்டினப்பாக்கத்து இளநங்கை தன் தோழி வசந்தமாலையை நோக்கி இனிய குரலில் யவன மல்லனைத் திணறச் செய்யும் அவன் புகழை வாய் ஓயாமல் கூறிக் கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/17&oldid=1141581" இலிருந்து மீள்விக்கப்பட்டது