பக்கம்:மணி பல்லவம் 1.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

171

னவோ இவருடைய முகத்தைக் கண்டு சிரிப்பு மூள்வதற்குப் பதில் சீற்றம் மூண்டு யாரோ ஒற்றைக்கண்ணைப் பொட்டையாக்கி அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது” என்று வயிற்றெரிச்சல் தீர மறுமொழி கூறினாள் சுரமஞ்சரி.

“நாடக மேடையில் ஆடிய கூத்துக்களைவிட இவர் வாழ்க்கையில் ஆடும் கூத்துக்கள்தாம் அதிகம் போலிருக்கிறதம்மா ...”

“தந்தையாரிடம் வந்து சேர்ந்தபின் இவருடைய கூத்துக்கள் மிகவும் அதிகமடி வசந்தமாலை...”

உணவுக் கூடத்தில் எல்லாருக்கும் நடுவே சுரமஞ்சரியும் வசந்தமாலையும் இப்படித் தங்களுக்குள் இரகசியம் பேசுவது போல் பேசிக் கொண்ட பேச்சினால் எல்லாருடைய கவனமும் அவர்கள் பக்கம் திரும்பவே பேச்சை அவ்வளவில் நிறுத்திக் கொண்டனர்.

“என்னவோ நீயும் உன் தோழியுமாக உங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறீர்களே சுரமஞ்சரி! எங்களோடு திடீரென்று உனக்கு என்ன கோபம் வந்து விட்டதம்மா?” என்று தந்தையார் மறுபடியும் அவளுக்கு உற்சாகமூட்டிப் பேசவைக்கும் முயற்சியைத் தொடங்கினார். அவர் இவ்வளவு தூண்டிக் கேட்ட பின்னும் பேசாமலிருந்தால் நன்றாயிராதென்று பட்டும்படாமலும் ஏதோ பேசினாள் சுரமஞ்சரி.

“சுரமஞ்சரி தேவிக்கு இன்று ஏதோ சில காரணங்களால் மனம் குழப்பமடைந்துள்ளது போல் தோன்றுகிறது, ஐயா?” என்று அதுவரை பேசாமலிருந்த நகைவேழம்பர் முதல் முறையாக வாய் திறந்தார். அந்த நேரத்தில் அங்கே அவரைப் போன்று தன்னால் விரும்பத்தகாத ஒருவர் தன் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதே சுரமஞ்சரிக்குப் பிடிக்கவில்லை. அழுக்கும் சேறும் படிந்த தரையில் கால் அழுந்தி நிற்க அருவருப்படைந்து கூசுகிறாற்போலச் சிலருடைய பேச்சில் செவிகளும், மனமும் அழுந்தித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/172&oldid=1141974" இலிருந்து மீள்விக்கப்பட்டது