பக்கம்:மணி பல்லவம் 1.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

மணிபல்லவம்

தோய்வதற்கு விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்கள் பேசும்போது கேட்கிறவர்களுக்கு அருவருப்பும், கூச்சமுமே ஏற்படுகின்றன. நகைவேழம்பரின் பேச்சும் சுரமஞ்சரிக்கு இத்தகைய அருவருப்பைத்தான் உண்டாக்கிற்று. அத்தகைய மனிதர் ஒருவரின் நாவிலிருந்து தன் பெயர் ஒலிக்கும் போது அந்த நாவின் அழுக்குத் தனது அழகிய பெயரிலும் தோய்வது போன்று மிகவும் கூச்சத்தோடு கூடியதொரு வெறுப்பைச் சுரமஞ்சரி அடைந்தாள்.

“நகைவேழம்பரே! புதிதாக நம் மாளிகைக்கு வந்துள்ள இந்த ஓவியனை உங்கள் பொறுப்பில் ஒப்படைக்க எண்ணியுள்ளேன், வெளியில் அநாவசியமாக அலைந்து திரியாமல் இவள் மாளிகையிலேயே தங்கிப் பணிகளைச் செய்யுமாறு கண்காணித்துக் கொள்ள வேண்டியது உங்கள் வேலை. இதற்குமேல் விவரமாக நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்குக் குறிப்பறியத் தெரியும்” என்று உணவு முடிகிற நேரத்தில் தந்தையார் நகைவேழம்பருக்கு இருபொருள் தொனிக்கும் குறிப்புடன் உத்திரவிட்டதையும் சுரமஞ்சரி கவனித்துக் கொண்டாள். ‘இந்த மாளிகையை விட்டு ஆள் வெளியேறிவிடாமல் ஓவியனைச் சிறை செய்து பாதுகாத்துக் கொள்’ என்று சொல்ல வேண்டியதற்குப் பதில் அதையே கௌரவமான வார்த்தைகளில் கௌரவமான தொனியோடு தந்தையார் நகைவேழம்பருக்குச் சொல்லியிருக்கிறார் என்பதை அவள் உய்த்துணர்ந்து புரிந்துகொள்ள முடிந்தது. தந்தையாருக்கு என்னதான் வயதும், தகுதியும் செல்வமும் இருந்த போதிலும் அந்த ஓவியக் கலைஞனை அவர் ஏக வசனத்தில் குறிப்பிட்டுப் பேசியது சுரமஞ்சரிக்கு என்னவோ போலிருந்தது. நுண்கலைகளை மதிக்கும் நளினமான மனமுள்ளவள் அவள். அவளுடைய கோமளமான சுபாவத்துக்குக் கலைகள் பிறக்குமிடத்தைச் சுலபமாக நினைப்பவர்களைப் பொறுத்துப் பழக்கமில்லை. அதுவும் ஓவியம் இளமையிலிருந்து அவள் மனத்தில் பித்து ஏறிப் பதிந்த கலை. அந்தக் கலைக்கு உரியவர்களைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/173&oldid=1141975" இலிருந்து மீள்விக்கப்பட்டது