பக்கம்:மணி பல்லவம் 1.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

மணிபல்லவம்

எங்கும் அமைதி தங்கி நிற்கும் நேரம். எங்கும் அழகு பொங்கிநிற்கும் தோற்றம். எங்கும் ஒளியடங்கின நேரத்துக்கு உரிமையான ஒலியடங்கின அடக்கம்.

அப்போது அந்தத் துறைமுகத்தின் ஒதுக்கமான பகுதி ஒன்றில் மணிபல்லவத்துக்குப் புறப்படும் சிறிய பாய்மரக் கப்பலின் அருகே அருட்செல்வ முனிவரும், வீரசோழிய வளநாடுடையாரும் நின்று கொண்டிருந்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் அந்தக் கப்பல் புறப்படுவதற்கிருந்தது. புத்தர் பெருமானின் பாரத பீடிகைகளைத் தரிசனம் செய்வதற்குச் செல்லும் பௌத்த சமயத் துறவிகள் சிலரும் கப்பலுக்கு அண்மையில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

அன்று அந்தக் கப்பல் புறப்படும் நேரத்தில் அங்கே வழக்கமான கூட்டம் இல்லை. கப்பலில் பயணம் செய்வதற்கு இருந்தவர்களும் மிகக் குறைந்த தொகையினர் தாம். நகரத்தில் வாராது வந்த பேரழகுக் கொண்டாட்டமாக இந்திரவிழா நடந்து கொண்டிருக்கும்போது எவராவது வெளியூர்களுக்குப் போக ஆசைப்படுவார்களா? வெளியூர்களிலிருந்தெல்லாம் காவிரிப்பூம் பட்டினத்துக்கு மனிதர்களை வரவழைக்கும் சிறப்பு வாய்ந்த திருவிழா அல்லவா அது? அதனால்தான் துறவிகள் சிலரையும் இன்றியமையாத கப்பல் ஊழியர்களையும் தவிரப் பயணத்துக்காகக் கூடும் வேறு கூட்டம் அங்கே இல்லை.

கப்பல் புறப்படப் போகிறது என்பதற்கு அறிகுறியாக மேல் தளத்தில் கட்டப் பெற்றிருந்த மணியை ஒலிக்கச் செய்தான் மீகாமன். கண்களில் நீர் பனிக்க நின்ற வீர சோழிய வளநாடுடையாரை அன்போடு தழுவிக் கொண்டார் அருட்செல்வ முனிவர். உணர்வு மிகுந்து பேசுவதற்கு அதிகம் சொற்களின்றி இருந்தனர் இருவரும்.

நல்லவர்களோடு நட்பு செய்து பழகிக் கொள்வதில் எவ்வளவு துன்பமிருக்கிறது பார்த்தீர்களா? பேதையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/177&oldid=1141980" இலிருந்து மீள்விக்கப்பட்டது