பக்கம்:மணி பல்லவம் 1.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

மணிபல்லவம்

மடலில் எழுதுவதற்காக அவளுள்ளத்தே எழும் இங்கிதமான நினைவுகளின் சாயல் முகத்திலும் தோன்றியதனால் வட்டப் பொற்பேழையில் வண்ணநிலாக் கதிர்களின் ஒளி படிந்தது போல் அவள்முகம் புதுமையழகு காட்டியது. கண்கள், பார்வை, இதழ்கள், சிரிப்பு, பளிங்குத் தரையில் தோகை விரித்துச் சாய்ந்த மயில்போல் அவள் சாய்ந்து அமர்ந்து மடல் தீட்டும் கோலம், எல்லாம் புதுமைதான், எல்லாம் அழகுதான். வசந்தமாலை தன் தலைவியையே கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு செயலை மனம் நெகிழ்ந்து விரும்பிச் செய்யும்போது அப்படிச் செய்வதனாலேயே மனிதர்களின் முகத்துக்குத் தனிமையானதொரு மலர்ச்சியும் அழகும் உண்டாகும். பருவகாலத்துப் பூவைப்போல் தோற்றமும் மணமும் செழித்துக் கிளரும் நிலை அது. அந்த வெண்தாழை மடலில் முத்து முத்தாய்ச் சித்திரம் போல் எழுத்துக்களை எழுதும்போது சுரமஞ்சரி அதற்கு முன்னில்லாததொரு தனி அழகுடன் காட்சியளித்தாள். இணையற்ற உற்சாகத்தை அவள் முகமும் கண்களும் காட்டின. தலைவியின் அந்தப் பேரழகு நிலையைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது வசந்தமாலைக்கு. கார்காலத்து முல்லைப் புதர்போல் தலைவியிடம் ஏதோ பூத்துக் குலுங்கி மணப்பதையும் அவள் புரிந்து கொண்டாள்.

கீழே குனிந்து எழுதிக் கொண்டிருந்த சுரமஞ்சரி எழுதுவதை நிறுத்திவிட்டுத் தலை நிமிர்ந்து, “வசந்த மாலை! நீ போய் நகைவேழம்பரோடு தங்கியிருக்கும் அந்த ஓவியனை அழைத்துக் கொண்டு வா. இந்த மடலை அவருக்குக் கொடுத்தனுப்புவதற்கு அவன்தான் தகுதியான மனிதன்” என்றாள்.

“அது எப்படியம்மா முடியும்? உங்கள் தந்தையார் தான் ஓவியனை நகைவேழம்பருடைய பொறுப்பில் விட்டிருக்கிறாரே. அவரிடம் நீங்கள் எப்படி மடல் கொடுத்து அனுப்ப முடியும்? சற்று முன்புதான் நகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/185&oldid=1141988" இலிருந்து மீள்விக்கப்பட்டது