பக்கம்:மணி பல்லவம் 1.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

மணிபல்லவம்

வில்லை. ‘பிறருடைய இரக்கத்தையும் அனுதாபத்தையும் எதிர்பார்த்துத் தவித்து அவற்றுக்காகவே ஏங்கிக் கொண்டிருப்பவன் கோழை! பிறர்மேல் அநுதாபமும் இயக்கமும் செலுத்துவதற்குத் துணிந்து நிற்பவன்தான் ஆண்மையுள்ள வீரன்! அநுதாபத்தையும் இரக்கத்தையும் தன்னிடமிருந்து பிறருக்கு வழங்குவதுதான் வீரம். அவற்றை தான் பிறரிடமிருந்து வாங்கிக் கொள்வது வீரமன்று’ என்பதுபோல் ஒரு முரட்டுப் பிடிவாதம் சிறுவயதில் இருந்தே இளங்குமரனுக்குப் பொருந்தியிருந்தது.

அவனைத் தனியாக அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அவன் வாய் திறந்து கேட்காமலிருக்கும்போதே அவனது மனத்தில் இருந்த சில கேள்விகளைத் தாமாகவே புரிந்து கொண்டு கூறுகிறவர் போல் குறிப்பாகச் சில கருத்துக்களைக் கூறியிருந்தார் நீலநாக மறவர். அவற்றையெல்லாம் இப்போது இரண்டாம் முறையாக நினைவின் விளிம்புக்குக் கொண்டு வந்து எண்ணிப் பார்த்தான் இளங்குமரன். அவ்வாறு எண்ணிப் பார்த்தபோது அவர் சொல்லியிருந்த ஒவ்வொரு கருத்தும் விடையறியாக் கேள்விகளாகத் தன் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்த ஒவ்வொரு வினாவுக்கும் விடைபோல் அமைவதும் அவனுக்கு விளங்கிற்று.

“தம்பீ! மனத்தை வீணாகக் குழப்பிக் கொள்ளாதே. மனமும் நினைவுகளும் வளர்ந்து வளம் கொள்ளுகிற வயதில் கவலைகள் புகுந்து அழிக்கவிடக் கூடாது. கவலைகளுக்கு அழிந்து போய்விடாமல் கவலைகளை அழித்து விட வேண்டிய வயது இது! கடலும், மலையும், வானமும், சூரியனும், சந்திரனும், தங்களுக்குத் தாயும் தந்தையும் யாரென்றும் தேடித் துயர் கொள்வதில்லை. பூமிக்குத் தாய் வானம்; வானத்துக்குத் தாய் பூமி, பிரகிருதியே ஒரு தாய்தான் தம்பீ! ஆகாயத்தை உடம்பாகவும், திசைகளைக் கைகளாகவும், சூரிய சந்திரர்களைக் கண்களாகவும், மலைகளை மார்பாகவும், தரையைத் திருவடிகளாகவும் கொண்ட விசுவரூபமே தாயின் வடிவம்தான். அதையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/191&oldid=1141995" இலிருந்து மீள்விக்கப்பட்டது