பக்கம்:மணி பல்லவம் 1.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

191

நீயும் தாயாக நினைத்து வணங்கி விடு” என்று அவர் சொல்லியதற்குப் பொருள் ‘தாயை நினைத்து வீணாகக் கலங்காதே’ என்று தனக்கு அறிவுறுத்துவதுதான் என்பதை அவன் தெளிந்தான்.

“நீ செய்வதற்கு இருக்கும் செயலைக் காட்டிலும் உன்னுடைய நோக்கம் பெரிதாக இருக்க வேண்டும். அதைத்தான் இலட்சியம் என்கிறோம். நினைப்பதையெல்லாம் பெரிதாக நினைப்பதற்குப் பழகிக்கொள். நினைவின் எல்லை விரிவாக இருக்கட்டும்” என்று இப்படி பல அறிவுரைகள் கூறிய பின்னே அந்த வேண்டுகோளையும் கூறியிருந்தார் நீலநாக மறவர். நினைக்கும் போதெல்லாம் புதிதாகவும் நினைப்புக்கேற்ற விதமாகவும் மணக்கும் மனோரஞ்சிதப் பூவைப்போல் அவருடைய அறிவுரையின் குறிப்பாகப் பலவற்றை அவன் புரிந்து கொண்டான். எண்ணிப் பார்த்தால், திட்டமிட்டுத் தேவையறிந்து வேண்டிய அறிவுரையை வேண்டிய அளவு வேண்டிய காலத்தில் அவர் தனக்குத் தந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. மறுபடியும் அவருடைய முன்னேற்பாட்டை வியந்தான் அவன்.

கதக்கண்ணன் முதலிய நண்பர்களோடு அன்று மாலையில் ஆலமுற்றத்துச் சிவன் கோவிலுக்குப் போனான் இளங்குமரன். வானத்தை மறைத்து வீழ்துகளைக் காலூன்றிப் பசுமைப் பந்தல் வேய்ந்தது போல் பெரிய ஆலமரமும் அதனருகே கோவிலும் மாலை நேரத்தில் மிக அழகாயிருந்தன. மணற்பரப்பைக் கடந்து கடல் என்னும் நீலமேனி நீர்ச்செல்வி நித்திய யௌவனத்தோடு அலைக்கைகளை அசைத்துக் கொண்டிருந்தாள். மேலைத்திசை வானத்தில் குங்கும வெள்ளம் பாய்ந்திருந்தது. இளங்குமரனும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள். ஆலமுற்றுத்துக் கோவில் படைக்கலச் சாலையைச் சேர்ந்த பகுதியாய் அதற்கு மிகவும் அருகில் இருந்ததால்தான் நண்பர்களின் துணையோடு இளங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/192&oldid=1141996" இலிருந்து மீள்விக்கப்பட்டது