பக்கம்:மணி பல்லவம் 1.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

19

சற்றும் தயங்காமல் துணிவாக இவ்வாறு மறுமொழி கூறிய அந்த எழிலரசியின் வதனத்தைச் சில விநாடிகள் இமையாது நோக்கினான் இளங்குமரன். அவள் இன்னும் நன்றாக, இன்னும் அழகாக, இன்னும் நிறைவாக நகைத்துக் கொண்டே மணிமாலையை அவனுக்கு மிக அருகில் நீட்டினாள் அந்தத் துணிவும், செல்வச் செழிப்பும் அவன் மனத்துக்குப் புதுமையான அனுபவத்தை அளித்தன. பல்லக்கிலிருந்த அடையாளங்கள் அவள் எட்டிப் பட்டம் பெற்ற பெருங்குடியைச் சேர்ந்தவள் என்பதை அவன் உய்த்துணர இடமளித்தன.

பதில் ஒன்றும் கூறாமல் மெல்ல நகைத்தான் இளங்குமரன். அந்த நகைப்பில் எதையோ சாதாரணமாக மதித்து ஒதுக்குகிறாற் போன்ற அலட்சியத்தின் சாயல் தான் அதிகமிருந்தது. அவன் நண்பர்கள் அமைதியாக நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். இளங்குமரன் அதே குறும்பு நகையோடு கேட்டான்.

“அம்மணி! எனக்கு ஒரு சிறு சந்தேகம்!”

“என்ன சந்தேகமா?”

“இதை எனக்குக் கொடுத்துவிடுவதனால் நீங்கள் பெருமைப்பட இடமிருக்கிறது. ஆனால் இதை உங்களிடமிருந்து வாங்கிக் கொள்வதனால் நான் பெருமைப்பட்டுக் கொள்ளச் சிறிதாவது இடமிருக்கிறதா என்பதுதான் என் சந்தேகம்” என்று நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி இளங்குமரன் கேட்டபோது அவள் மருண்டாள். அவளுடைய மலர் விழிகள் வியந்தது போலகன்றன.

“வாங்கிக் கொள்ளுங்கள், ஐயா! எங்கள் தலைவி நீங்கள் மற்போர் செய்தபோது காட்டிய ஆர்வத்தைக் கண்டு நானே வியப்படைந்து விட்டேன்!” எழிலரசிக்கு எதிரே தோழி போன்ற தோற்றத்தோடு வீற்றிருந்த மற்றொரு பெண் இளங்குமரனை நோக்கி இவ்வாறு பரிந்து கூறினாள். இதைக் கேட்டு இன்னும் பெரிதாக நகைத்தான் இளங்குமரன். அவள் முகம் அந்த நகைப்பொலியால் சுருங்கிச் சிறுத்தது போல் சாயல் மாறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/20&oldid=1141584" இலிருந்து மீள்விக்கப்பட்டது