பக்கம்:மணி பல்லவம் 1.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

205

என்ன நினைவு எழும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் மூடனில்லை.”

தன் மனத்தில் தோன்றியதை அவர் கண்டு பிடித்துச் சொல்லிவிட்டாரே என்று தலைகுனிந்தான் மணிமார்பன். “ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் நீயும் ஒருநாள் இங்கே தலைகீழாய்த் தொங்குவாய். இந்தக் கொடும் புலிகளுக்கு இரையாவாய்” என்று கூறியவாறே ஓவியனை இழுத்துக் கொண்டு மேலே படியேறினார் நகைவேழம்பர்.

படிகளில் ஏறி மேலே வந்தவுடன் தகைவேழம்பர் அவனைத் திகைக்க வைக்கும் மற்றொரு கேள்வியையும் கேட்டார்.

“தம்பீ! நானும் நீ வந்ததிலிருந்து கவனிக்கிறேன். உன்னிடம் தாழம்பூ மணம் கமழ்கிறதே? இத்தனை வயது வந்த இளைஞனாகிய பின்பும் பூ வைத்துக் கொள்ளும் ஆசை இருக்கிறதா உனக்கு?” என்று கூறிச் சிரித்துக் கொண்டே மணிமார்பனின் இடுப்புக் கச்சையிலிருந்து வாள் நுனிபோல் சிறிதளவு வெளியே தெரிந்த வெண் தாழை மடலை உற்றுப் பார்த்தார் நகைவேழம்பர்.

‘ஐயோ! இதையும் இந்தப் பாவி மனிதர் பார்த்து விட்டாரே’ என்று உள்ளம் பதறி நின்றான். மணிமார்பன்.

“ஒன்றுமில்லை.. ஐயா... மணத்துக்காக எடுத்துச் சொருகிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறித் தப்ப முயன்றும் அவர் அவனை விடவில்லை.

“எங்கே பார்க்கலாம்? அந்த நறுமணத்தை நானும்தான் சிறிது மோந்து பார்க்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தபடியே அவன் இடையிலிருந்து அந்த வெண்தாழை மடலை உருவி எடுத்துவிட்டார் அவர். என்ன செய்வதென்று தோன்றாமல் அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டான் மணிமார்பன். ‘ஐயா! இதை நீங்கள் பார்க்கக் கூடாது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றும் இந்த மடலில் இல்லை’ என்று கடிந்து கூறி அவரை விரைந்து தடுக்கும் ஆற்றல் அவனுக்கு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/206&oldid=1142014" இலிருந்து மீள்விக்கப்பட்டது