பக்கம்:மணி பல்லவம் 1.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

மணிபல்லவம்

நகைவேழம்பர் தீப்பந்தத்துக்கருகில் மடலை நீட்டி ஒற்றைக் கண்ணைப் பக்கத்தில் கொண்டுபோய் உற்றுப் பார்க்கலானார். அந்த மடலைப் படிக்கும்போது, அவர் முகம் என்னென்ன உணர்ச்சிகளைக் காட்டுகிறது? எப்படிக் கடுமையடைகிறது? என்பதையெல்லாம் கவனித்துக் கொண்டு நிற்பதைத் தவிர ஓவியனால் வேறொன்றும் செய்வதற்குத் துணிய முடியவில்லை. அதைப் படித்துவிட்டுத் தலைநிமிர்ந்தார் நகைவேழம்பர்.

“தாழை மடலில் வெறும் நறுமணம் மட்டும் கமழவில்லையே? காதல் மணமும் சேர்ந்தல்லவா கமழ்கிறது?” என்று கூறிக் கொண்டே தீப்பந்தத்தைக் கீழே எறிந்து விட்டு எலும்பு முறிகிறாற்போல் அவன் கையை அழுத்திப் பிடித்து இறுக்கினார் அவர். ஓவியனின் மெல்லிய கையில் இரத்தம் குழம்பிச் சிவந்தது. கைப்பிடியால் இறுக்குவது போதாதென்று கேள்வியாலும் அவனை இறுக்கினார் அவர்.

“இந்த மடலை ஏன் இதற்குரியவனிடம் சேர்க்கவில்லை?”

“உரியவருக்கு இதைப் பெற விருப்பமில்லை” என்று சுருக்கமாகப் பதில் கூறினான் ஓவியன். அதற்குமேல் அவர் அவனை ஒன்றும் கேட்கவில்லை. அந்த மடலையும் அவனிடம் திருப்பித் தரவில்லை. அவனை இழுத்துக் கொண்டுபோய் மாளிகைத் தோட்டத்தில் தாம் வசிக்கிற பகுதியின் இருண்ட அறை ஒன்றில் தள்ளிக் கதவுகளை வெளிப்புறம் தாழிட்டுக் கொண்டு போனார் நகை வேழம்பர். ஓவியனைச் சுற்றிலும் இருள் சூழ்ந்தது. அவன் மனத்திலும்தான்.

தன்னுடைய மாடத்தில் தோழி வசந்தமாலையோடு ஓவியன் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்த சுரமஞ்சரிக்கு நேரம் ஆக ஆகக் கவலை பிறந்தது. ஓவியன் மேல் சந்தேகமும் உண்டாயிற்று. அந்த மாளிகையிலிருந்து தப்பிப் போக வேண்டுமென்ற ஆசையில், தான் வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/207&oldid=1142015" இலிருந்து மீள்விக்கப்பட்டது