பக்கம்:மணி பல்லவம் 1.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

மணிபல்லவம்

தோன்றுகிறது, நீ என்ன தடை சொன்னாலும் நான் கேட்கப்போவதில்லை பல்லக்கிலே போக வேண்டாம். கீழே வா, எப்படிப் போகலாமென்று தெரிவிக்கிறேன்” என்று வசந்தமாலையையும் இழுத்துக் கொண்டு வேகமாகக் கீழே இறங்கி வந்தாள் சுரமஞ்சரி.

கீழே தன் தலைவி விரைவாகச் செய்த ஏற்பாடுகளைப் பார்த்தபோது வசந்தமாலைக்கே அதிசயமாக இருந்தது. குதிரைகள் கட்டியிருந்த கொட்டாரத்துக்குப் போய் வேகமாகச் செல்லவல்ல வெண்புரவிகள் இரண்டை அவிழ்த்து வந்து மாளிகையின் ஒருபுறத்தே நிறுத்தியிருந்த அழகிய அலங்காரத் தேரில் தன்னுடைய வளைகள் ஒலிக்கும் கைகளாலேயே பூட்டினாள் சுரமஞ்சரி. தேரைச் செலுத்தும் சாரதியின் இடத்தில் அவள் தானே ஏறி நின்று கடிவாளக் கயிறுகளைப் பற்றிக் கொண்டாள்.

“வசந்தமாலை! உள்ளே ஏறிக்கொள்” என்று அவள் கட்டளையிட்டபோது மறுத்துச் சொல்லத் தோன்றாமல் அப்படியே ஏறிக்கொள்வதைத் தவிர, தோழியால் அப்போது வேறொன்றும் செய்ய முடியவில்லை.

வேளையில்லாத வேளையில் மாளிகையின் இளவரசிதானே தேரைச் செலுத்திக் கொண்டு வெளியேறுவதைப் பார்த்து வாயிற் காவலர்கள் வியந்து நின்றனர்.

இரவின் அமைதி கவிந்த பட்டினப் பாக்கத்து அகன்ற வீதிகளில் சுரமஞ்சரியின் தேர் ஓசையெழுப்பிக் கொண்டு விரைந்தது. நிசப்தமான தெருக்களில் மத்தளத்தை அளவாக வாசிப்பது போல் குதிரைக் குளம்பொலி எழுந்து ஒலித்தது. வேகமாக ஓடும் தேரும் அதைவிட வேகமாக முந்திக்கொண்டு ஓடும் மனமுமாகச் சுரமஞ்சரி நீலநாகர் படைக்கலச் சாலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.

“அம்மா! தேரை நான் செலுத்துகிறேன். நீங்கள் உள்ளே உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று வசந்தமாலை நடுவழியில் கூறிய வார்த்தைகளுக்குச் சுரமஞ்சரி செவிசாய்க்கவே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/209&oldid=1142018" இலிருந்து மீள்விக்கப்பட்டது