பக்கம்:மணி பல்லவம் 1.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

மணிபல்லவம்

சுழற்றி விளாசினாள். அடிபட்ட புரவிகள் மேலும் மேகமாகப் பாய்ந்தன. வந்ததைவிட வேகமாகத் திரும்பிக் கொண்டிருந்தது அவர்கள் தேர்.

தேர் மாளிகைக்குள் புகுந்து நின்றது. சுரமஞ்சரியும் வசந்தமாலையும் கீழே இறங்கினார்கள்.

“குதிரைகளை அவிழ்த்துக் கொட்டாரத்தில் கொண்டு போய்க் கட்டிவிட்டு வா” என்று தலைவி உத்தரவிட்டபடியே செய்தாள் வசந்தமாலை.

பின்பு இருவரும் மாளிகையின் மூன்றாவது மாடத்துக்குச் செல்லும் படிகளில் ஏறி மேலே சென்றார்கள். சுரமஞ்சரியின் மாடத்தில் தீபங்கள் அணைக்கப் பெற்று இருள் சூழ்ந்திருந்தது.

தாங்கள் வெளியே புறப்பட்டபோது தீபங்களை அணைத்ததாக நினைவில்லை சுரமஞ்சரிக்கு.

“எதற்கும் நீ கீழே போய்த் தீபம் ஏற்றிக் கொண்டு வா! தீபத்தோடு உள்ளே போகலாம். அதுவரை இப்படி வெளியிலேயே நிற்கிறேன்” என்று வசந்த மாலையைக் கீழே அனுப்பினாள் சுரமஞ்சரி.

சிறிது நேரத்தில் வசந்தமாலை தீபத்தோடு வந்தாள். தீப ஒளி உள்ளே பரவியபோது மாடத்தின் முதற் கூடத்துக்கு நடுவில் தன் தந்தையாரும், நகைவேழம்பரும், தங்கள் இருவர் வரவையும் எதிர்பார்த்தே காத்திருப்பது போல் அமர்ந்திருப்பதைச் சுரமஞ்சரியும் வசந்தமாலையும் கண்டு திடுக்கிட்டார்கள்.

“உள்ளே போகலாமா? இப்படியே திரும்பி விடுவோமா?” என்று பதறிய குரலில் தலைவியின் காதருகே மெல்லக் கேட்டாள் வசந்தமாலை.

“நம்மை ஒன்றும் தலையைச் சீவிவிட மாட்டார்கள். வா, உள்ளே போவோம்” என்று தோழியையும் கைப்பற்றி அழைத்தவாறு துணிவுடன் உள்ளே புகுந்தாள் சுரமஞ்சரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/213&oldid=1142022" இலிருந்து மீள்விக்கப்பட்டது