பக்கம்:மணி பல்லவம் 1.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



28. வேலும் விழியும்

வியனின் அந்த வார்த்தைகளை மறுபடி நினைத்தாலும் மனம் கொதித் தது இளங்குமரனுக்கு. ‘எவ்வளவு துணிவு இருந்தால் அவன் என்னிடம் அப்படிக் கூறியிருப்பான்.’

‘யாரைப் பார்த்து யார் சொல்லுகிற வார்த்தைகள் இவை? மணிமார்பனுடைய வயதென்ன? நிலை என்ன? என்னுடைய அநுதாபத்தைப் பெற்றவன் எனக்கே அறிவுரைகூற முன்வருவதா? சுரமஞ்சரி என்னும் பெண் காவிரிப் பூம்பட்டினத்திலேயே பேரழகியாக இருக்கலாம். வேறெவருக்கும் இல்லாத பெருஞ் செல்வத்துக்கு உரிமை பூண்டவரின் மகளாக இருக்கலாம். ஆனால் அவளுடைய அழகுக்கு மயங்கி நிறையிழக்கும் ஆண் பிள்ளையாக நான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லையே! அழகையும் அதனால் ஏற்படும் கவர்ச்சி மயக்கத்தையும் அனுபவித்துப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கிறதென்று வைத்துக் கொண்டாலும் அந்தச் சுகத்தைப் பெண்ணின் சிரிப்பிலும், கண்களிலும்தான் தேட வேண்டும் என்பதில்லையே! பூக்களின் மலர்ச்சியிலும், கடலின் அலைகளிலும், மேகந் தவழும் மழைக்காலத்து வானத்திலும் முழுமதி மறைந்தும், மறையாமலும், உலா வருவதிலேயே அழகைத் தேடி அனுபவித்துக் கொள்ளத் தெரியும் எனக்கு. உலகத்தைப் படைத்தவன் வஞ்சகமில்லாமல் எல்லாப் பொருள்களிலும்தான் அழகை வைத்திருக்கிறான். மனிதர்கள்தாம் அந்த அழகு மிகச் சில பொருள்களில் மட்டும் இருப்பதாக நினைத்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் அப்படித் தவிப்பவன் என்று இந்த ஓவியன் நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது. அப்பாவி ஓவியனே! பெண்ணின் சிரிப்பில் மட்டும்தான் உலகத்து அழகுகளெல்லாம் ஒளிந்து கொண்டிருப்பதாக நீ வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/214&oldid=1149501" இலிருந்து மீள்விக்கப்பட்டது