பக்கம்:மணி பல்லவம் 1.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

மணிபல்லவம்

மானால் நினைத்துக் கொண்டிரு. ஆனால் இளங்குமரனை யும் சேர்த்து அவ்விதமாக நினைக்காதே- நான் இவ்வளவு சிறிய மயக்கங்களுக்காக என் மனத்தை இழந்து விடச் சித்தமாயில்லை! வாழ்க்கையில் பெரிய இலட்சியங்கள் எனக்கு இருக்கின்றன. இப்போது நான் தவித்துக் கொண்டிருப்பது சுரமஞ்சரியின் அழகு முகத்துக்காகவும் சிரிப்புக்காகவும் அல்ல; என் தாயின் அன்பு முகத்தையும் சிரிப்பையும் காண்பதற்காகத்தான் நான் அல்லும், பகலும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களைத் தெரிந்து கொண்டு அவர்கள் சிரிப்புக்கு மயங்குவதற்கு முன்பே ‘நான் யார் என்று எனக்குத் தெரிய வேண்டும். இவ்வளவு வலிமையான உடலையும், மனத்தையும் வைத்துக் கொண்டு, ‘நான் யார்? எனக்கு அன்னையும் தந்தையுமாக இருந்து என்னை உலகுக்கு அளித்தவர்கள் யார்’ என்பவற்றைக்கூட நான் இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறேனே. என்னிடம் வந்து பெண்ணின் சிரிப்புக்குத் தோற்பதைப் பற்றிப் பேசுகிறாயே, அப்பனே?’

இளங்குமரன் இவ்வாறெல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்தபோதுதான், ஓவியனை அறைந்து அவமானம் செய்து அனுப்பியதில் தவறு ஒன்றுமில்லை என்றே தோன்றியது. ‘விவரம் தெரிந்த பிள்ளையாயிருந்தால் இப்படி அசட்டுத்தனமாகப் பேசி என் ஆத்திரத்தை வளர்த்து அறைவாங்கிக் கொண்டு போயிருக்க வேண்டாம்’ என்று ஓவியனிடம் சிறிது இரக்கமும் கொண்டான் அவன்.

இன்னும் அவனுடைய வலது கையில் தாழம்பூ மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கையால்தான் சுரமஞ்சரியின் மடலை அவன் தீண்டினான். படித்தபின் கசக்கி எறியவும் முயன்றான். நீலநாகர் படைக்கலச் சாலையின் மரங்களடர்ந்த முற்றத்தில் கடற்காற்றின் சுகத்தை நுகர்ந்து கொண்டே இளங்குமரன் கட்டிலின் மேல் சாய்ந்து உறங்க முயன்று கொண்டிருந்த சமயத்தில் புரண்டு படுக்கும் போதெல்லாம் கையிலிருந்து இந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/215&oldid=1142024" இலிருந்து மீள்விக்கப்பட்டது