பக்கம்:மணி பல்லவம் 1.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

215

தாழம்பூ மணம் பரவி அவன் உறக்கத்தைத் தடை செய்தது. வெறுப்போடு எழுந்து சென்று கைகளை நன்றாகக் கழுவிவிட்டு வந்து படுத்துக் கொண்டான் அவன். அவளைப் பற்றிய நினைவு நெஞ்சில் மட்டுமல்லாமல் கைகளிலும் மணக்கக்கூடாதென்று வெறுப்போடு அவற்றைத் தன்னிலிருந்து பிரித்தான் அவன்.

ஆனால், மறுநாள் காலையில் முதல் நாளிரவு மனத்திலிருந்தும், கையிலிருந்தும் சேர்த்துக் கழுவிய இதே நினைவுகளை மீண்டும் இளங்குமரனை நினைக்கச் செய்து விட்டார் நீலநாக மறவர். வானம் கண் விழிக்கும் வைகறைப் போதில் இளங்குமரனின் பவழச் செஞ்சுடர் மேனியில் இளங்பொன் வெய்யில் பட்டு அவன் கண்கள் மலர்ந்த போது அந்த விழிப்பையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நிற்பவர்போல் அவனுடைய கட்டிலருகில் நீலநாக மறவர் நின்று கொண்டிருந்தார். கண்களைத் திறந்ததும் அவர் முகத்தில்தான் விழித்தான் இளங்குமரன். உடனே வாரிச் சுருட்டிக் கொண்டு துள்ளியெழுந்து அடக்கமாக நின்றான். தான் விழித்துக் கொள்வதற்கு முன்பே அவர் தனக்காகத் தன் கட்டிலருகே வந்து நின்று கொண்டிருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. நீராடி ஆலமுற்றத்துச் சிவன் கோயிலின் வழிபாட்டையும் முடித்துக் கொண்டு மாணவர்கட்கு படைக்கலப் பயிற்சி அளிப்பதற்கேற்ற கோலத்தில் இருந்தார் நீலநாக மறவர், சிரிப்பும் இன்றிச் சீற்றமும் இன்றி வெறுப்பும் இன்றி வேட்கையுமின்றி இளங்குமரனின் முகத்தையே இமையாமல் உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றார் அவர். அவருடைய கைகள் வேலைப்பாடு அமைந்ததும் புதிய தாகப் படைக்கலச் சாலையிலே வடிக்கப்பட்டதுமாகிய சிறிய வேல் ஒன்றைப் பற்றி அலட்சியமாகச் சுழற்றிக் கொண்டிருந்தன.

அவர் தன்னிடம் ஏதோ கேட்கப் போகிறாரென்று எதிர்பார்த்துக் கொண்டு நின்றான் இளங்குமரன். அவருக்கு முன் நிற்கும்போது இருக்க வேண்டிய பணிவும், குழைவும் அவன் நின்ற தோற்றத்திலேயே தெரிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/216&oldid=1142025" இலிருந்து மீள்விக்கப்பட்டது