பக்கம்:மணி பல்லவம் 1.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

217

இடத்தை வீரமும், ஆண்மையும் பிறக்கின்ற இடத்துக்கு உவமை சொல்வது எப்படி ஐயா பொருந்தும்?”

“ஆண்மை என்ற வார்த்தைக்கு நீ என்ன பொருள் புரிந்து கொண்டிருக்கிறாய். தம்பீ!”

“ஆளும் தன்மை என்று பொருள் புரிந்து கொண்டிருக்கிறேன்.”

“எதை ஆளும் தன்மையோ? உடம்பையா, மனத்தையா, புலன்களையா, அல்லது வேலையும், வாளையும், வில்லையும் எடுத்து ஆளும் தன்மையா? உன்னிடமிருந்து நான் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் தம்பீ!” என்றார் நீலநாக மறவர்.

“எல்லாவற்றையும் ஆளும் தன்மையைத்தான் நான் சொல்லுகிறேன்.”

“அதாவது வீரம் அல்லது ஆண்மை என்பது வில்லையும் வேலையும் எடுத்து ஆள்வது மட்டுமன்று. எல்லாவற்றையும் தன் வசப்படுத்தி ஆளுவது என்பதுதானே உன் கருத்து?”

“ஆமாம் ஐயா!”

“அப்படியானால் இதைக் கேள், இளங்குமரா! இப்போது இந்தப் படைக்கலச்சாலையில் எனக்கு மிகவும் வேண்டியவனும் கண்ணைக் கவரும் அழகனுமான இளைஞன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு உடல் வலிமையும் வேண்டிய அளவு இருக்கிறது. வில்லையும், வேலையும், ஆள்வதற்கு மட்டும்தான் அவனுக்குத் தெரிகிறது. மனத்தையும், புலன்களையும் ஆள அவனுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. கூரிய வேலையும், வாளையும் பிடித்து வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆண்மையைப் பெண்ணின் கண்களுக்குத் தோற்றுப் போகும்படி செய்து கொண்டிருக்கிறான் அவன். இன்னும் கேள், அழகிய இளம்பெண்கள் அவனைத் தேடிக் கொண்டு அகாலமான இரவு நேரங்களில் இங்கே இரதத்தில் வருகிறார்கள். அந்தப் பெண்களை விசாரித்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/218&oldid=1142027" இலிருந்து மீள்விக்கப்பட்டது