பக்கம்:மணி பல்லவம் 1.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

மணிபல்லவம்

அவன் தங்களைத் தேடிக் கொண்டு தங்கள் மாளிகைக்கு அடிக்கடி வழக்கமாய் வருவது உண்டென்றும் சொல்கிறார்கள். அந்த இளைஞன் வீரமும் ஆண்மையும் உள்ளவன் என்று நான் நினைப்பதா? இல்லாதவன் என்று நினைப்பதா?”

“இதில் சந்தேகமென்ன? வீரமும்? ஆண்மையும் இருந்தால் அவன் ஏன் இப்படிப் பெண்களின் சிரிப்புக்கும், பார்வைக்கும் தோற்றுப் போய் அலைகிறான்?”

இதைக் கேட்டு நீலநாக மறவர் பெரிதாகச் சிரித்தார். அவர் ஏன் அப்படிச் சிரிக்கிறார் என்று இளங்குமரன் திகைத்து நின்றபோது தம் கைகளிலிருந்த வேலைக் கீழே எறிந்துவிட்டு வலது கையை உயர்த்தி ஆள்காட்டி விரலை அவன் முகத்துக்கு நேரே நீட்டியபடி கூறலானார் நீலநாக மறவர்:

தம்பீ! அப்படிப் பெண்களின் சிரிப்புக்கும், பார்வைக்கும் தோற்றுப்போய் அலைபவன் வேறெங்கும் இல்லை. இதோ என் எதிரே இளங்குமரன் என்ற பெயரோடு நின்று கொண்டிருக்கிறான் அவன்...”

தீயை மிதித்தாற் போலிருந்தது இளங்குமரனுக்கு, எங்கோ சுற்றி வளைத்துப் பேசித் தன் பேரில் கொண்டு வந்து முடித்ததைக் கண்டு திடுக்கிட்டான் அவன். நேற்றிரவு இதேபோல் ஒரு கேள்வியைக் கேட்டதற்காகத்தானே அவன் ஓவியனை அறைந்து அனுப்பியிருந்தான்? இன்றும் விடிந்ததும் விடியாத்துமாக இப்படி ஒரு பழியா?

“என்ன தம்பீ! திருடனுக்கு தேள் கொட்டினாற்போல் இப்படி விழிக்கிறாய்? உன்னுடைய ஆண்மையை அழித்துத் தன்னுடைய பெண்மைக்கு வெற்றிப் பெருமிதம் சேர்த்துக் கொண்ட அந்தப் பட்டினப்பாக்கத்து நங்கையின் வேல் விழிகளை நேற்றிரவு நானே பார்த்தேன்.”

“நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை ஐயா! எதையோ தப்பாகப் புரிந்து கொண்டு என்மேல் பழி சுமத்துகிறீர்களே...?” என்று தொடங்கிய இளங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/219&oldid=1142028" இலிருந்து மீள்விக்கப்பட்டது