பக்கம்:மணி பல்லவம் 1.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

219

குமரனை மேலே பேசவிடாமல் தடுத்து அவர் பேசத் தொடங்கினார்-

“இன்னும் புரியும்படியாக விளக்கிச் சொல்ல வேண்டுமானால், இதோ கேள் தம்பீ”- என்று தொடங்கி முதல் நாள் பின்னிரவில் தேரேறி அவனைத் தேடிக்கொண்டு வந்த பெண்களைப் பற்றிக் கூறினார் நீலநாக மறவர். அவர் கூறியதிலிருந்து, வந்தவர்கள் சுரமஞ்சரியும் அவள் தோழி வசந்தமாலையுமாகத்தான் இருக்க வேண்டுமென்பது இளங்குமரனுக்குப் புரிந்தது. மடலோடு அறை வாங்கிக் கொண்டு திரும்பிப் போன ஓவியன் சுரமஞ்சரியையே நேரில் போகச் சொல்லி இங்கே அனுப்பியிருக்கலாம் என்று நினைத்தான் அவன். சுரமஞ்சரியின் மேல் அவனுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு இப்போது ஆத்திரமாக மாறியது. “எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நீங்கள் நினைக்கிறாற்போல் ஒரு நெருக்கமும் இல்லை. அவள் எதற்காக என்னைத் தேடி வந்தாள் என்பதே எனக்குத் தெரியாது” என்று எவ்வளவோ சொல்லி, அவருடைய தவறான கருத்தை மாற்ற முயன்றான் இளங்குமரன். நீலநாக மறவர் அவ்வளவு எளிதாக அதை நம்பவில்லை.

“எனக்கு விளக்கம் தேவையில்லை தம்பீ! உன்னுடைய வாழ்க்கையில் நீ பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், இனிமேலாவது உன்னைத் திருத்திக்கொள். என்னைப் போல் ஆயுதங்களை எடுத்தாள்வதுடன் புலன்களையும் ஆளத் தெரிந்து கொண்ட வீரனாக நீ உருவாக வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன். உன்னை வளர்த்து ஆளாக்கிய அருட் செல்வ முனிவரின் நோக்கமும் அதுதான். அதிலிருந்து நீ வழி விலகக்கூடாது” என்று கோபமாகச் சொல்லிவிட்டு மாணவர்களுக்குப் படைக்கலப் பயிற்சி கற்பிப்பதற்காகச் சென்று விட்டார் நீலநாக மறவர்.

ஏதோ நினைப்புடனே அவர் கீழே எறிந்து விட்டுப்போன வேலைக் குனிந்து கையிலெடுத்தான் இளங்குமரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/220&oldid=1142029" இலிருந்து மீள்விக்கப்பட்டது