பக்கம்:மணி பல்லவம் 1.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

221

வருவதற்குத் துணிந்து அனுமதி கேட்பது எப்படி என்று அவன் தயங்கினான்.

இவ்வாறு அவன் தயங்கிக் கொண்டிருந்தபோது அந்தப் படைக்கலச் சாலையில் இருந்தாற் போலிருந்து வழக்கமாகக் கேட்கும் ஒலிகளும் வீரர்களின் ஆரவாரமும் ஓய்ந்து அமைதி நிலவியது. திடீரென்று என்ன ஆகிவிட்டதென்று புரியாமல் இளங்குமரன் மருண்டான். சென்ற விநாடிவரையில் வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் நீலநாக மறவரின் கம்பீரக் கட்டளைக் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது; இந்த விநாடியில் அதுவும் ஒலிக்கவில்லை. வாளோடு வாள் மோதும் ஒலி, போர்க்கருவிகள் செய்யும் உலைக்களத்திலும் பட்டறையிலும் இரும்பு அடிபடும் ஓசை, வீரர்களின் பேச்சுக்குரல் எல்லாம் ஓய்ந்து மயான அமைதி நிலவியது. காற்றுக்கூடப் பலமாக வீசப்படுவது போன்ற அந்த அமைதி ஏன் நேர்ந்ததென்று காண்பதற்காக முற்றத்திலிருந்து படைக்கலச் சாலையின் உட்பகுதிக்கு விரைந்தான் இளங்குமரன்.

அங்கே பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த வீரர்கள் அமைதியாய் மூலைக்கு மூலை ஒதுங்கி தலைகுனிந்தவாறு நின்று கொண்டிருந்தார்கள், நடுவில் நீலநாக மறவரும் வீரசோழிய வளநாடுடையாரும் கண்கலங்கி நின்றார்கள். இருவருடைய தோற்றத்திலும் துக்கத்தினால் தாக்குண்ட சோர்வு தெரிந்தது.

இளங்குமரனைப் பார்த்ததும் வீரசோழிய வளநாடுடையார் ‘கோ’வென்று கதறியழுதபடி ஓடிவந்து அவனைத் தழுவிக் கொண்டார். நீலநாக மறவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நின்ற இடத்திலிருந்து அசையாமல் அப்படியே நின்றார்.

“உனக்கு இதுவரை நிழல் தந்து கொண்டிருந்த நெடுமரம் சாய்ந்து விட்டது. தம்பி! தவச்சாலை தீப்பற்றி எரிந்து முனிவர் மாண்டு போய்விட்டார்” என்று துயரம் பொங்கும் குரலில் கூறினார் வளநாடுடையார். இளங்குமரனுக்கு அந்தச் செய்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/222&oldid=1142032" இலிருந்து மீள்விக்கப்பட்டது