பக்கம்:மணி பல்லவம் 1.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

மணிபல்லவம்

“முனிவர் தவச்சாலைக்கு எப்படிப் போனார்! அவரை உங்கள் வீட்டில் அல்லவா விட்டு வந்தேன்...” என்று பதறிப்போய்க் கேட்டான் இளங்குமரன்.

கண்ணீர் பொங்கத் துயரம் அடைக்கும் குரலில் நடந்தவற்றை அவனுக்குக் கூறினார் வளநாடுடையார். இளங்குமரனுக்குக் கண்கள் இருண்டன. உலகமே சுழல்வது போலிருந்தது. ‘அப்படியும் நடந்திருக்குமா? நடந்திருக்க முடியுமா?’ என்று நினைக்க நினைக்க துக்கம் பெருகியது அவனுக்கு.

பெற்றோரும் உற்றாரும் இல்லாத காலத்தில் தன்னை வளர்த்து ஆளாக்கி தாயாகவும் தந்தையாகவும் இருந்து காத்துவந்த உத்தமர் தீயில் மாண்டு போனார் என்று அறிந்தபோது அவனுக்கு அழுகை குமுறிக் கொண்டு வந்தது. வலிமையும் வீரமும் பொருந்திய அவன், பேச்சு வராத பருவத்துப் பச்சைக் குழந்தைபோல் குமுறி அழுத காட்சி அங்கிருந்த எல்லாரையும் மனமுருகச் செய்தது. இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழுதழுது சோர்ந்துபோய் அவன் தரையில் சாய இருந்த போது அதுவரையில் பேசாமல் நின்று கொண்டிருந்த நீலநாக மறவர் விரைவாக ஓடிவந்து அவனைத் தாங்கிக் கொண்டார்.

“இந்தப் பாவியை மன்னிப்பாயா, தம்பீ? என்னிடம் அடைக்கலமாக இருந்த போதில், அவருக்கு இப்படி நேர்ந்து விட்டதே என்பதை நினைத்தால் என்னால் துக்கத்தைத் தாங்க முடியவில்லையே?” என்று வீரசோழிய வளநாடுடையார் தமது ஆற்றாமையைச் சொல்லி புலம்பி அழுதார்.

அப்போது நீலநாக மறவர் வளநாடுடையாரை நோக்கிக் கையமர்த்தி அவருடைய அழுகையை நிறுத்தச் செய்தார்.

“அழுது ஆகப் போவதென்ன? மனிதர்களின் மரணம் காலத்தின் வெற்றிகளில் ஒன்று. புகழும், செல்வமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/223&oldid=1142033" இலிருந்து மீள்விக்கப்பட்டது