பக்கம்:மணி பல்லவம் 1.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

மணிபல்லவம்

தோன்ற விடலாகாது” என்று மீண்டும் அவனுக்கு இதமாக எடுத்துச் சொல்லி ஆற்ற முயன்றார் நீலநாக மறவர்.

தான் வெளியே சொல்லிக் கொள்ள முடியாமல் தன் மனதுக்குள்ளேயே அழவேண்டிய பெருங்குறை ஒன்றையும் இளங்குமரனால் அப்போது நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அருட்செல்வ முனிவர் தீயில் சிக்கி மாண்டபோதே அவனுடைய பிறப்பையும், பெற்றோரையும் பற்றிய உண்மையும் எரிந்து அழிந்துபோய் விட்டது. அந்த இரகசியத்தைத் தெரிந்து கொண்டிருந்த ஒரே மனிதரும் மாண்டுபோய் விட்டார் என்று அறிகிறபோது அவனுக்கு உலகமே இருண்டு போனாற்போல் துயரம் ஏற்படத்தான் செய்தது. எதை அறிந்து கொள்ளும் ஆவலினால் அவனுக்கு வாழ்க்கையில் சுவையும், விருப்பமும் நிறைந்திருந்தனவோ அதை இனிமேல் அவன் யாரிடமிருந்து அறிந்து கொள்வான்? அவனுடைய அருமைத் தாயை அவனுக்கு யார் காட்டுவார்கள்? நீலநாக மறவர் கூறியது போல் உலகத்தையே தாயாக எண்ணி மகிழ வேண்டியது தானா? அவ்வளவுதான் அவனுக்குக் கொடுத்து வைத்ததா?

“இப்படி நின்று அழுதுகொண்டே இருந்தால் நேரமும் கண்ணீரும்தான் செலவாகும். வா, இறந்தவருக்குச் செய்ய வேண்டிய நீத்தார் கடன்களைச் செய்யலாம்” என்று நீலநாக மறவர் அவனைக் கைப்பற்றி அழைத்துக்கொண்டு போனார்.

“உயிரோடிகுந்து கொண்டே காரியத்துக்காகச் செத்துப் போனதாகப் பொய்யைப் பரப்பிட ஏற்பாடு செய்தவருக்கு மெய்யாகவே இறந்ததுபோல் நீத்தார் கடனாற்ற விடலாமா?” என்று மனத்துக்குள் தயங்கினார் வீரசோழிய வளநாடுடையார்.

ஆனால் அவர் இளங்குமரனைத் தடுத்து நிறுத்தவில்லை. தடுத்தால் பொய்மை நாடகம் வெளியாகி விடுமோ என்ற அச்சத்தால் மௌனமாயிருந்து விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/225&oldid=1142035" இலிருந்து மீள்விக்கப்பட்டது