பக்கம்:மணி பல்லவம் 1.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

மணிபல்லவம்

“நெருங்கிய தொடர்புள்ள ஒருவரின் மரணத்தைப் பற்றி அதிகத் துக்கமில்லாமல் இப்படி இயல்பான விதத்தில் அறிவிக்கிறாரே” என்று தந்தை அருட்செல்வரின் மரணத்தைக் கவலையின்றி அறிவித்த விதத்தை எண்ணித் திகைப்படைந்தாள் முல்லை.


30. நெஞ்சில் மணக்கும் நினைவுகள்

தோழி வசந்தமாலை தீபத்தை ஏந்திக் கொண்டு உடன்வர மாடத்துக்குள் நுழைந்த சுரமஞ்சரி அங்கே முன் கூடத்தில் சினத்தோடு வீற்றிருந்த தன் தந்தையாரையும் நகைவேழம்பரையும் கண்டும் காணாதவள் போல் அவர்களைப் புறக்கணிக்கும் குறிப்புடன் விலகி நேரே நடக்கலானாள். வேளையில்லாத வேளையில் அவர்கள் அங்கே வந்து அமர்ந்திருப்பது முறையில்லை என்பதை அவர்களுக்கே உணர்த்த வேண்டுமென்பதற்காகத்தான் சுரமஞ்சரி அப்படிப் புறக்கணித்தாற்போல் பாராமுகமாக நடந்து சென்றாள்.

ஆனால் அவளும் தோழியும் முன் கூடத்தைக் கடந்து, அலங்கார மண்டபம், சித்திரச்சாலை முதலிய பகுதிகளுக்குச் செல்லும் இரண்டாம் கூடத்து வாயிலை நெருங்கியபோது தந்தையாரின் குரல் பின்புறமிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்தியது. அந்தக் குரலில் சினமும், கடுமையும் மிகுதியாயிருந்தன.

“சுரமஞ்சரி! இப்படி வந்துவிட்டுப் போ. உன்னை எதிர்பார்த்துத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்.”

அவள் திரும்பி நின்றாள்; தந்தையார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறாற்போல் ஆத்திரத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/227&oldid=1149524" இலிருந்து மீள்விக்கப்பட்டது