பக்கம்:மணி பல்லவம் 1.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

மணிபல்லவம்

சக்கரவாளக் கோட்டமென்னும் பகுதியும் இருந்தன. சக்கரவாளக் கோட்டத்தின் அங்கங்களாகிய முனிவர்களின் தவச்சாலையும் கந்திற்பாவை கோட்டமும் உலகவறவியும் இன்னொரு பக்கத்தே இரவின் அமைதியிலே மூழ்கிக் கிடந்தன மரக்கிளைகளின் அடர்த்திக்கு இடையே சிறு சிறு இடைவெளிகளின் வழியே கறுப்புத் துணியிற் கிழிசல்கள் போல் மிகக் குறைந்த நிலவொளி சிதறிப் பரவிக் கொண்டிருந்தது. நரிகளின் விகாரமான ஊளை ஒலிகள், கோட்டான்களும், ஆந்தையும் குரல் கொடுக்கும் பயங்கரம் எல்லாமாகச் சேர்ந்து அந்த நேரத்தில் அந்த வனப்பகுதியை ஆட்கள் பழக அஞ்சுமிடமாக்கிக் கொண்டிருந்தன. வனத்தின் நடுவே சம்பாபதி கோயில் தீபத்தின் மங்கிய ஒளியினால் சுற்றுப்புறம் எதையும் நன்றாகப் பார்த்துவிட முடியாது. நரி ஊளைக்கும் ஆந்தை அலறலுக்கும் இணைந்து நடுநடுவே சக்கரவாளக் கோட்டத்து வன்னி மரங்களின் கீழே கபாலிகர்களின் நள்ளிரவு வழிபாட்டு வெறிக் குரல்களும் விகாரமாக ஒலித்தன.

இந்தச் சூழ்நிலையில் சம்பாபதி வனத்தின் ஒரு பகுதியில் இளங்குமரன் அவசரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். தோளிலும் உடலின் பிற அங்கங்களிலும் மாலையில் கடற்கரையில் அந்த யவன மல்லனோடு போரிட்டு வென்ற களைப்பு இருந்ததாயினும் மிக முக்கியமான காரியத்தை எதிர் நோக்கிச் செல்கிறவன் போல் அந்த அகால நேரத்தில் அங்கு அவன் சென்று கொண்டிருந்தான். கடற்கரையிலும், நாளங்காடிப் பூத சதுக்கத்திலும், இந்திரவிழாக் கோலாகலங்களைப் பார்த்து விட்டுத் திரும்பியபோது மருவூர்ப்பாக்கத்தில் - நண்பர்களை ஒவ்வொருவராக அனுப்பிவிட்டு, வேண்டுமென்றே தனிமையை உண்டாக்கிக் கொண்டு, புறப்பட்டிருந்தான் அவன். இந்தச் சம்பாபதி வனமும், சக்கரவாளக் கோட்டமும், பயங்கரமான இரவுச் சூழலும் அவனுக்குப் புதியவையானால்தானே அவன் பயப்பட வேண்டும்? உயிர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/23&oldid=1141588" இலிருந்து மீள்விக்கப்பட்டது