பக்கம்:மணி பல்லவம் 1.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

மணிபல்லவம்

கவலைப்படவில்லை. கப்பல் வாணிகத்திலும் பிறவற்றிலும் பல்லாண்டுகளாகப் பழகிப் பழகிச் சூழ்ச்சிகளும், சாதுரியமாகப் பேசும் ஆற்றலும் பெற்றிருந்ததைப் போலவே எதிராளியைத் தம் கருத்துக்கேற்ப வளையச் செய்ய எந்த வார்த்தைகளை எப்படி இணைத்துப் பேச வேண்டுமோ அப்படிப் பேசி விடுவதிலும் தந்தையார் தேர்ந்தவர் என்பது அவளுக்குத் தெரியும். மாளிகையையே குடிப் பெருமையால் நிமிர்ந்து நிற்கச் செய்திருப்பதாக அவர் கூறிய விதம் அழகாகவும், உருக்கமாகவும் இருந்தது அவளுக்கு. ஆனால், அவர் அப்படிக் கூறிவிட்டதற்கு ஏற்பத்தான் இளங்குமரனுக்கு மடல் எழுதியதோ, இரவில் அவனைச் சந்திப்பதற்காகத் தேடிக் கொண்டு சென்றதோ, குடிப்பெருமைக்குக் குறைதேடும் காரியங்கள் என்று அவள் ஒருபோதும் நினைக்கவோ ஒப்புக் கொள்ளவோ சித்தமாயில்லை. இளங்குமரனைக் கண்களாற் காணும்போதும் நெஞ்சினால் நினைக்கும் போதும் தான் உணரும் பெருமை, வேறெந்த நினைவினாலும் எய்துவதற்கு அரிதாயிருந்தது அவளுக்கு. தான் எவற்றையும் வேண்டித் தவிக்காமல், தன்னுடையவை என்றிருக்கும் எல்லாவற்றுக்காகவும் எல்லாரும் ஏங்கவும் தவிக்கவும் செய்துவிடுகிற ஓர் ஒளி அவன் முகத்திலும் கண்களிலும் இருக்கிறதே; அதற்குமுன் அவள் குடிப் பெருமை எம்மாத்திரம்? அவள் தந்தையின் அரசபோக ஆடம்பரங்களும், மலை போல் குவிந்த செல்வமும் எம்மாத்திரம்? விழியிலும், மொழியிலும்; இதழிலும், நகைப்பிலுமாக ஆண்மையைச் சூறையாடுவதற்கு அவள் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் எழில் நுணுக்கங்கள் எம்மாத்திரம்? இளங்குமரனின் மனத்தையும், அந்த மனத்தின் விருப்பத்தையும் வெற்றி கொள்வதைவிட உயர்ந்த பெருமை இந்த உலகத்தில் வேறொன்றும் இருக்க முடியாது என்பதை இந்திர விழாவின் முதல்நாள் மாலை கடற்கரையில் அவனைச் சந்தித்துப் பேசிய சில விநாடிகளிலேயே அவள் உறுதி செய்து கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/231&oldid=1142046" இலிருந்து மீள்விக்கப்பட்டது