பக்கம்:மணி பல்லவம் 1.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

மணிபல்லவம்

தார் நீலநாக மறவர். நீராட்டு விழாவுக்கு முந்திய நாள் பகலிலேயே படைக்கலச் சாலை ஆளரவமற்று வெறிச்சோடிப் போய்விட்டது. நீலநாக மறவர் திருநாங்கூர் நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அங்கிருந்த மற்ற இளைஞர்களும் கூட்டம் கூட்டமாகக் காவிரித் துறைக்குப் போய் நீராட்டு விழாக் கோலாகலத்தில் மூழ்கி மகிழச் சென்று விட்டார்கள். நாளைக்குத்தான் விழா நாள் என்றாலும் உற்சாகத்தை அதுவரை தேக்கி வைக்க முடியாமல் இன்றைக்கே புறப்பட்டுச் சென்றிருந்தார்கள் அவர்கள்.

ஆனால் அதே நாளில் அதே வேளையில் வெளியே சென்று நகரத்தின் இந்திரவிழா மகிழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பாமல் படைக்கலச் சாலையின் எல்லைக் குள்ளேயே தனிமையும் தானுமாக இருந்தான் இளங்குமரன்.

கடந்த இருபது நாட்களில் ‘இளங்குமரன் படைக்கலச் சாலையின் எல்லைக்குள்ளிருந்து வெளியேறலாகாது’ என்ற கட்டுப்பாட்டையும் படிப்படியாகத் தளர்த்தியிருந்தார் நீலநாக மறவர். அருட்செல்வ முனிவரின் மறைவால் இளங்குமரன் அடைந்திருந்த துக்கமும், அதிர்ச்சியும் அவனை ஒரே இடத்தில் கட்டுப்படுத்தி அடைத்து வைத்திருப்பதனால் இன்னும் அதிகமாகி விடக்கூடாதே என்று கருதித்தான் அப்படிச் செய்திருந்தார் அவர்.

“இளங்குமரன் படைக்கலச் சாலையிலிருந்து வெளியேறி எங்காவது சென்றாலும் தடுக்க வேண்டாம். ஆனால் நீங்கள் யாராவது அவனோடு துணை போய் வருவது அவசியம்” என்று திருநாங்கூருக்குப் புறப்படுவதற்கு முன்பு கூடக் கதக்கண்ணன் முதலிய இளைஞர்களிடம் அவர் சொல்லிவிட்டுப் போயிருந்தார். அப்படி இருந்தும் இளங்குமரன் தானாகவே வெளியில் எங்கும் செல்வதற்கு விருப்பமின்றிப் பித்துக் கொண்டவன்போலப் படைக்கலச் சாலைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/237&oldid=1143280" இலிருந்து மீள்விக்கப்பட்டது