பக்கம்:மணி பல்லவம் 1.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

237

நீலநாக மறவரைத் திருநாங்கூருக்கு வழியனுப்பி விட்டுக் கதக்கண்ணன் இளங்குமரனிடம் வந்து அவனை நீராட்டுவிழா நடக்குமிடத்துக்குப் போகலாமென அழைத்தான்.

“இன்று என் மனமே சரியில்லை. வெளியில் எங்கும் போய் வரவேண்டுமென்ற உற்சாகமும் எனக்கு இல்லை. முடிந்தால் நாளைக்குக் காலையில் வந்து கூப்பிடு! உன்னோடு காவிரித் துறைக்கு வந்தாலும் வருவேன்” என்று கதக்கண்ணனுக்கு மறுமொழி கூறி அவனை அனுப்பினான் இளங்குமரன்.

நீராடு துறைக்கு எல்லாரும் புறப்பட்டுச் சென்று விட்டார்கள். இருள் மயங்கும் நேரத்துக்குப் படைக்கலச் சாலையின் முற்றத்தில் இருந்த மேடையில் வந்து காற்றாட உட்கார்ந்து கொண்டிருந்தான் இளங்குமரன். அருட் செல்வ முனிவரின் மறைவுக்குப் பின் அவனுடைய மனமும், நினைவுகளும் துவண்டு சோர்ந்திருந்தன.

நீலநாக மறவர் அவ்வப்போது ஆறுதல் கூறி, அவன் மனத்தைத் தேற்றிக் கொண்டிருந்தார். அன்று அவரும் ஊரில் இல்லாததனால் அவன் மனம் மிகவும் வருந்திக் கொண்டிருந்தது.

‘என்னுடைய கைகளில் வலிமை இருக்கிறது மனத்தில் ஆவல் இருக்கிறது. ஆனால் இந்த வலிமையைப் பயன்படுத்தி என் பெற்றோரை அறியவும், காணவும் துடிக்கும் ஆவலை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லையே; என் ஆவலைத் தக்க சமயத்தில் நிறைவேற்றுவதாகச் சொல்லிக் கொண்டிருந்த முனிவரும் போய்விட்டார். அவர் இருந்தவரை - ஆவல் நிறைவேறாவிடினும், என்றாவது ஒருநாள் அவரால் அது நிறைவேறுமென்ற நம்பிக்கையாவது இருந்தது. இப்போது அதுவும் இல்லையே’ என்று நினைத்து நினைத்து அந்நினைவு மாறுவதற்கு ஆறுதல் ஒன்றும் காணாமல் அதிலேயே மூழ்கியவனாக அமர்ந்திருந்தான் இளங்குமரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/238&oldid=1142053" இலிருந்து மீள்விக்கப்பட்டது