பக்கம்:மணி பல்லவம் 1.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

மணிபல்லவம்

மாலைப் போது மெல்ல மெல்ல மங்கி இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. படைக்கலச் சாலையின் பெரிய வாயிற் கதவு மட்டும் திறந்திருந்தது. அதையும் மூடிவிடலாம் என்று இளங்குமரன் எழுந்து சென்றபோது, காற்சிலம்புகளும் கைவளையல்களும் ஒலிக்க நறுமணங்கள் முன்னால் வந்து பரவிக் கட்டியங் கூறிடச் சுரமஞ்சரியும் மற்றோர் இளம்பெண்ணும் அந்த வாயிலை நோக்கி உள்ளே நுழைவதற்காகச் சிறிது தொலைவில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் மனத்தில் அவள் மேல் கொண்டிருந்த ஆத்திரமெல்லாம் ஒன்று சேர்ந்தது. ‘இப்படி ஒருநாள் வேளையற்ற வேளையில் இங்கே இந்தப் பெண் என்னைத் தேடி வந்ததனால்தானே நீலநாக மறவர் என்மேல் சந்தேகமுற்று என்னைக் கடிந்து கொண்டார்’ என்பது நினைவுக்கு வந்தது அவனுக்கு.

கதவுக்கு வெளியிலேயே நிறுத்தி அவர்களைக் கடுமையாகக் கண்டித்துத் துரத்திவிட வேண்டுமென்று இளங்குமரன் முடிவு செய்து கொண்டான். ஆனால் அவனுடைய ஆத்திரமும் கடுமையும் வீணாகும்படி அந்தப் பெண்கள் நடந்து கொண்டு விட்டார்கள். அவர்கள் படைக்கலச் சாலையின் திட்டி வாயிற் கதவருகே அவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவனருகில் வராமலே நேராக ஆலமுற்றத்துக் கோவிலுக்குப் போகும் வழியில் திரும்பி நடக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களை எப்படியும் கோபித்துக் கொண்டு ‘இனிமேல் என்னைத் தேடி இங்கே வராதீர்கள்’ என்று கடிந்து சொல்லிவிடவும் துணிந்திருந்த இளங்குமரனுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

‘அவள் எங்கே போனால்தான் என்ன? சிறிது தொலைவு பின் தொடர்ந்து சென்றாவது அவளைக் கோபித்துக் கொண்டு தன் ஆத்திரத்தைச் சொல்லித் தீர்த்துவிட வேண்டும்’ என்ற நினைப்புடன் இளங்குமரனும் அந்தப் பெண்களைப் பின் தொடர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/239&oldid=1142054" இலிருந்து மீள்விக்கப்பட்டது