பக்கம்:மணி பல்லவம் 1.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

23

அழிவுக்கு நிலமாக இருந்த இதே சக்கரவாளத்துக்கு அருகில் இருந்த வனத்தில்தான் அவன் வளர்ந்து செழித்துக் காளைப் பருவம் எய்தினான்! இதே சம்பாபதி கோவில் வாயிலிலுள்ள நாவல் மரங்களின் கீழ் விடலை வாலிபர்களோடும், முரட்டு இளைஞர்களோடும், அலைந்து திரிந்துதான் வலிமையை வளர்த்துக் கொண்டான். இங்கே ஒவ்வோரிடமும் ஒவ்வோர் புதரும், மேடு பள்ளமும் அவனுக்குக் கரதலப் பாடம் ஆயிற்றே! எத்தனை வம்புப் போர்கள், எத்தனை இளம் பிள்ளைச் சண்டைகள், எத்தனை அடிபிடிகள், அவனுடைய சிறு பருவத்தில் இந்த நாவல் மரங்களின் அடியில் நடைபெற்றிருக்கும்! அவனுடைய அஞ்சாமைத் துணிவுக்கும் இந்தச் சூழ்நிலையில் வளர்ந்ததே ஒரு காரணமென்று நண்பர்கள் அடிக்கடி கூறுவதுண்டு.

மனத்தின் அந்தப் பழைய நினைவுகள் எல்லாம் தோன்றிப் படர வேகமாக நடந்து கொண்டிருந்தான் இளங்குமரன்.

இன்றைக்கு இந்த நள்ளிரவில் நான் தெரிந்து கொள்ளப் போகிற உண்மை என் வாழ்வில் எவ்வளவு பெரிய மலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறது! என்னைப் பெற்ற அன்னையை நினைவு தெரிந்த பின் முதன் முதலாக இன்று காணப் போகிறேன். அவளுடைய அருள் திகழும் தாய்மைத் திருக்கோலத்தை இந்த இருண்ட வனத்துக்குள் சம்பாபதி கோவிலின் மங்கிய விளக்கொளியில் காணப் போகிறேனே என்பதுதான் எனக்கு வருத்தமாயிருக்கிறது! இன்னும் ஒளிமிக்க இடத்திலே அவளைக் காணவேண்டும். தாயே! என்னை வளர்த்து ஆளாக்கி வாழவிட்டிருக்கும் அந்த புனிதமான முனிவர். இன்று உன்னை எனக்குக் காண்பிப்பதாக வாக்களித்திருக்கிறார். ‘சித்திரை மாதம் சித்திரை முழுமதி நாளில் இந்திர விழாவன்று உன் அன்னையைக் காண்பிக்கிறேன்’ என்று மூன்றாண்டுகளாக ஏமாற்றி, என் ஆவலை வளர்த்துவிட்டார் முனிவர். இன்று என் உள்ளம் உன்னை எதிர்பார்த்து நெகிழ்ந்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/24&oldid=1141589" இலிருந்து மீள்விக்கப்பட்டது