பக்கம்:மணி பல்லவம் 1.pdf/241

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

மணிபல்லவம்

இளங்குமரனின் கோபத்தை இன்னும் வளர்த்தது. உடனே விரைவாக ஓங்கி உதறித் தன் கையை அவருடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டான் அவன். சுரமஞ்சரியின் தந்தை கோபப்படாமல் அதே பழைய நகைப்புடன் அவனை நோக்கிக் கேட்டார்.

“யாருக்கும் பிடிகொடுக்காத பிள்ளையாயிருப்பாய் போலிருக்கிறதே?”

“பிடித்தவர் பிடியில் எல்லாம் சிக்கிச் சுழல்வதற்கு நான் அடிமையில்லை. நீங்கள் ஆண்டானும் இல்லை.”

“நீ பொதுவாகப் பேசுவதற்கு வாய் திறந்தாலே உன் பேச்சில் ஒரு செருக்கு ஒலிக்கிறது, தம்பீ! ஆத்திரத்தோடு பேசினால் அதே செருக்கு மிகுந்து தோன்றுகிறது. ஆனால் இப்போது யார் முன்னால் நின்று என்ன பேசுகிறோம் என்று நீ கவனமாக நினைவு வைத்துக் கொண்டு பேசுவதுதான் உனக்கு நல்லது.”

“எங்களைப் போன்ற அநாதைகளுக்குச் செல்வமில்லை. சுகபோகங்கள் இல்லை. இந்தச் செருக்கு ஒன்று தான் எங்களுக்கு மீதமிருக்கிறது. இதையும் நீங்கள் விட்டுவிடச் சொல்கிறீர்களே? எப்படி ஐயா விடமுடியும்?”

அப்போது அந்த இருள் மயங்கும் வேளையில் எந்தச் சூழ்நிலையில் எவர் முன்பு நின்று பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது இளங்குமரனுக்கு நன்றாகப் புரிந்துதான் இருந்தது. தனிமையான ஆலமுற்றத்து மணல் வெளியில் சுரமஞ்சரியின் தந்தையும் அவருக்குத் துணைபோல் வந்திருந்த ஒற்றைக்கண் மனிதனுமாக எதிரே நிற்கும் இருவரும் தனக்கு எவ்வளவு பெரிய தீமையையும் செய்யத் தயங்காதவர்கள் என்பதை உணர்ந்திருந்த இளங்குமரன் அதற்காக அஞ்சவில்லை. அன்றிச் சிந்தித்துப் பார்த்த போது அன்று மாலை வேளையில் தொடக்கத்திலிருந்து, அங்கு நடந்தவை அனைத்துமே திட்டமிட்டுக் கொண்டு செய்யப்பட்ட சூழ்ச்சியாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டான் இளங்குமரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/241&oldid=1142056" இலிருந்து மீள்விக்கப்பட்டது