பக்கம்:மணி பல்லவம் 1.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

மணிபல்லவம்

பார்த்தேனே, ‘வரவில்லை’ என்று நீங்கள் பொய் சொல்லுகிறீர்களே?...”

“நான் பொய் சொல்வதற்குப் பல சமயங்கள் நேர்ந்திருக்கின்றன, தம்பீ! சில சமயங்களை நானே ஏற்படுத்திக் கொண்டதும் உண்டு. அவற்றுக்காக நான் வருத்தமோ? வெட்கமோ அடைந்ததில்லை. இனியும் அப்படிப் பொய் கூறும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும், ஏற்படுத்திக் கொண்டாலும் அவற்றுக்காக நான் வெட்கமடையப் போவதில்லை. நான் பெரிய வாணிகன். மலைமலையாகச் செல்வத்தைக் குவித்துக் கொண்டிருப்பவன். உண்மையை நினைத்து, உண்மையைப் பேசி உண்மையைச் செய்து செல்வம் குவிக்க முடியாது.

“நல்லவை எல்லா அந்தீயவாம், தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு”

என்று செல்வம் செய்வதற்கு வகுத்திருக்கும் விதியே தனி வகையைச் சேர்ந்தது. தம்பீ! இந்த நகரில் எவரும் பெறுவதற்கு அரிய எட்டிப் பட்டமும், எண்ணி அளவிட முடியாத பெருஞ் செல்வமும் பெற்று மாபெரும் சோழ மன்னருக்கு அடுத்தபடி வசதியுள்ள சீமானாயிருக்கிறேன் நான். ஆனால் என்னுடைய இந்த செல்வத்துக்கு அடியில் நியாயமும் நேர்மையும், உண்மையும்தான் தாங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்று நீ நினைத்தால் அது பொய். நான் குவித்திருக்கும் செல்வத்தின் கீழே பலருடைய நியாயம் புதைந்து கிடக்கலாம். அதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. வெட்கமும் இல்லை. ஆனால் வாய் தவறி நான் சில உண்மைகளையும் எப்போதாவது சொல்வதுண்டு. அவற்றில் இப்படி சிறிது நேரத்துக்கு முன் உன்னிடம் கூறியதும் ஒன்று.”

“எதைச் சொல்கிறீர்கள்?”

“என் மகள் சுரமஞ்சரியும் அவள் தோழியும் இன்று இப்போது இங்கு வரவேயில்லை என்பதை மறுபடியும் உனக்கு வற்புறுத்திச் சொல்வதற்கு விரும்புகிறேன். இது தான் உண்மை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/243&oldid=1142058" இலிருந்து மீள்விக்கப்பட்டது