பக்கம்:மணி பல்லவம் 1.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

மணிபல்லவம்

செடியில் பூக்கும் எல்லாப் பூக்களுக்கும் மல்லிகைக்கே உரியதான மணம் இருப்பதைப் போல் நாங்கூர் அடிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும் அவருடைய நாவில் அது பிறந்ததென்பதாலேயே ஓர் அழகு இருப்பதுண்டு.

சிறப்பு வாய்ந்த இத்தகைய ஆசிரியர் பெருமகனாரைச் சந்திக்கச் செல்வதில் எந்த மாணவருக்குத்தான் இன்பமிருக்காது? நீராட்டு விழாவுக்கு முதல்நாள் காலையிலேயே காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து நாங்கூருக்குப் புறப்பட்டிருந்த நீலநாக மறவர் அந்தி மயங்கும் போதில், நாங்கூர் அடிகளின் பூம்பொழிலை அடைந்துவிட்டார். கூடடையடையும் பறவைகளின் ஒலியும் நாங்கூர் அடிகளின் மாணவர்கள் பாடல்களை இரைந்து பாடி மனப்பாடம் செய்யும் இனிய குரல்களும் அப்போது பூம்பொழிலில் ஒலித்துக் கொண்டிருந்தன.

நீலநாக மறவர் பொழிலுக்கு வெளியிலேயே தம்முடைய தேரை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி மேலாடையை இடுப்பில் கட்டிக் கொண்டு பயபக்தியோடு உள்ளே நடந்து சென்றார். கவசமும், வாளும் அணிந்து படைக்கலச் சாலையின் எல்லைக்குள் கம்பீரமாகக் காட்சியளிக்கும் நீலநாக மறவர் இப்போது எளிய கோலத்தில் தம் ஆசிரியரைத் தேடி வந்திருந்தார். அவர் உள்ளே சென்றபோது ஆசிரியராகிய நாங்கூர் அடிகள் அந்தப் பூம்பொழிலிலே இருந்ததொரு பொய்கைக் கரைமேல் அமர்ந்து நீர்ப்பரப்பில் மலர்ந்து கொண்டிருந்த செங்குமுத மலரைப் பார்த்துக் கொண்டிருந்தார். நீரின் மேல் தீ மலர்வது போல் செந்நிறத்தில் அழகாக மலரும் அந்தப் பூவின் மேல் அவருடைய கண்கள் நிலைத்திருந்தன.

தமக்குப் பின்னால் யாரோ மெல்ல நடந்து வரும் ஓசை கேட்டும் அவர் கவனம் கலைந்து திரும்பவில்லை. அவருக்கு ஒவ்வோர் அனுபவமும் ஒரு தவம்தான். எதில் ஈடுபட்டாலும் அதிலிருந்து மனம் கலையாமல் இணைந்து விட அவருக்கு முடியும். பூவின் எல்லா இதழ்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/257&oldid=1142072" இலிருந்து மீள்விக்கப்பட்டது