பக்கம்:மணி பல்லவம் 1.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

மணிபல்லவம்

நீந்தினால்தான் காவிரித்துறைகளில் ஏதாவதொன்றின் அருகே கரையேறி மீள முடியும். கிழக்கே போகப் போகக் கடல் நெருங்கிக் கொண்டிருந்தது. நீரும் உப்புக் கரிக்கத் தொடங்கியது. ஆழம் அதிகமாவதோடு முதலைகளினால் பெரும் எதிர்ப்பும் கிழக்கே போகப் போக மிகுதியாகி விடுமே என்று எண்ணி நடுக்காவிரியில் தத்தளித்தான் இளங்குமரன். செய்வதற்கு ஒன்றும் தோன்றவில்லை.

இந்தச் சமயம் பார்த்து மழையும் பெரிதாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. நாற்புறமும் பனி மூடினாற் போல மங்கலாகத் தெரிந்ததே தவிர ஒன்றும் தெளிவாகக் காண முடியவில்லை. மேகங்கள் தலைக்குமேல் தொங்குவது போலக் கவிந்து கொண்டன. காற்று வெறி கொண்டு வீசியது. அலைகள் மேலெழுந்து சாடின.

உயிர்களை எல்லாம் காக்கும் காவிரி அன்னை தன் உயிரையும், அந்தப் பேதைப் பெண்ணின் உயிரையும் பலிகொள்ள விரும்பிவிட்டாளோ என்று அவநம்பிக்கையோடு எண்ணினான் இளங்குமரன். நீரோட்டம் இழுத்தது, உடல் தளர்ந்தது. பெண்ணின் சுமை தோளில் அழுத்தியது. கால்கள் நிலை நீச்சும் இயலாமல் சோர்ந்தன. நம்பிக்கை தளர்ந்தது.

ஆனால் காவிரி அன்னை இளங்குமரனைக் கைவிட்டு விடவில்லை. சிறிதளவு சோதனைதான் செய்தாள். கிழக்கு நோக்கி நீரோட்டத்தோடு நீரோட்டமாகக் கவனிப்பாரின்றி மிதந்து வந்த படகு ஒன்று இளங்குமரனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று கொண்டிருந்தது. படகில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நீராட்டு விழா ஆரவாரத்தில் படகுக்குரியவர்களின் கவனத்தை மீறி அறுத்துக் கொண்டு வந்த அநாதைப் படகுபோல் தோன்றியது அது. பலங்கொண்ட மட்டும் முயன்று ஒரு கையால் அந்தப் பெண்ணின் உடலைப் பற்றிக் கொண்டு இன்னொரு கையை உயர்த்திப் படகைப் பற்றினான் இளங்குமரன். நீரின் வேகம் அவனையும் படகையும் சேர்த்து இழுத்தது. அவனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/263&oldid=1142080" இலிருந்து மீள்விக்கப்பட்டது