பக்கம்:மணி பல்லவம் 1.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

மணிபல்லவம்

சூழ்நிலையில் பகைவர் கரங்களின் கீழே அமுங்கிக் கொண்டே மீண்டும் நினைத்தான் இளங்குமரன். தாயைக் காணப் போகிறோம் என்ற அடக்க முடியாத அன்புணர்வின் மிகுதியால், முன் எச்சரிக்கை, தீரச் சிந்தித்தல் போன்ற பிற உணர்வுகளை இழந்து, தான் பகைமையின் வம்பில் வகையாக சிக்கிக் கொண்டதை அவன் உணர்ந்தான். மேலே எழ முடியாமல் தோள் பட்டைகளையும் கால்களையும் அழுத்தும் பேய்க் கரங்களின் கீழ்த் திணறிக் கொண்டே சில விநாடிகள் தயங்கினான் அவன். சிந்தனையைக் கூராக்கி எதையோ உறுதியாக முடிவு செய்தான். மனத்தில் எல்லையற்று நிறைந்து பெருகும் வலிமையை உடலுக்கும் பரவச் செய்வது போலிருந்ததே தவிர அவனது சிறிது நேரத் தயக்கமும் அச்சத்தின் விளைவாக இல்லை!

முதலில் வணங்குவதற்காகக் கீழே கவிழ்ந்திருந்த உள்ளங்கைகளில் குறுமணல் கலந்த ஈரமண்ணை மெல்லத் திரட்டி அள்ளிக் கொண்டான். ‘பிறந்த மண் காப்பாற்றும்’ என்பார்கள். சிறுவயதிலிருந்து தவழ்ந்தும், புழுதியாடியும் தான் வளர்ந்த சம்பாபதிவனத்து மண் இன்னும் சில கணங்களில் தனக்கு உதவி செய்து தன்னைக் காப்பாற்றப் போவதை எண்ணியபோது இளங்குமரனுக்குச் சிரிப்பு வந்தது. தன் வன்மையை எல்லாம் திரட்டிக் கொண்டு திமிறித் தலையை நிமிர்த்தித் தோளை அமுக்கிக் கொண் டிருந்தவனுடைய வயிற்றில் ஒரு முட்டு முட்டினான். அந்த முட்டுத் தாங்காமல் முட்டப்பட்டவன் நாவல் மரத்தடியில் இடறி விழுந்தான். அதே சமயம் பின்புறம், காலடியில் கால்களைப் பிணைத்துக் கட்ட முயன்று கொண்டிருந்தவனையும் பலமாக உதைத்துத் தள்ளிவிட்டு, உடனே விரைவாகத் துள்ளி எழுந்து நின்று கொண்டான் இளங்குமரன். முன்னும் பின்னுமாகத் தள்ளப்பட்டு விழுந்த எதிரிகள் இருவரில் யார் முதலில் எழுந்து வந்து எந்தப் பக்கம் பாய்ந்து தன்னைத் தாக்குவார்களென்று அது மானம் செய்து அதற்கேற்ற எச்சரிக்கையுணர்வோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/27&oldid=1141623" இலிருந்து மீள்விக்கப்பட்டது