பக்கம்:மணி பல்லவம் 1.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

ஏறுவதற்காக அந்தப் பெண்ணை அவன் தூக்கியபோது அவலும், நீருமாகக் குமட்டிக் குமட்டி, வாந்தி எடுத்தாள் அவள். இளங்குமரனின் பொன் நிறத் தோள்களில் அவள் உமிழ்ந்த அவலும் நீரும் ஒழுகி வடிந்தன. ஓர் உயிரைக் காப்பாற்றுகிறோம் என்ற பெருமிதத்தில் அவற்றை யெல்லாம் பொறுத்துக் கொண்டான் இளங்குமரன். ‘அழுக்குப் படாமல் பிறருக்கு உதவி செய்துவிட நினைத்தால் உலகத்தில் உதவிகளே இல்லாமற் போய் விடும்’- என்று நினைத்தபோது அவனுக்கு அவள் வாந்தி எடுத்தது வெறுப்பதற்குரியதாகப் படவில்லை.

கப்பல் கரப்புத் தீவில் ஈரமான செம்மண் தரையில் அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு நடந்தபோது இளங்குமரனின் மனம் கருணை மயமாக நெகிழ்ந்திருந்தது. பிறருக்கு உதவி செய்வதில் இருக்கிற மகிழ்ச்சி பிறரிடமிருந்து உதவியைப் பெறுவதில் இருக்க முடியாதென்று எப்போதும் அவனுக்கு ஒரு கருத்து உண்டு. அதையே மீண்டும் நினைத்துக் கொண்டு மகிழ்ந்தான் அவன்.

அந்தச் சமயத்தில் கப்பல் ஒன்று அவ்வழியே பூம்புகாரின் துறைமுகத்தை நோக்கி வருவதை அவன் கண்டான். உடனே தான் சுமந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை ஒரு மரத்தடியில் கிடத்திவிட்டுக் கப்பலை அழைப்பதற்கு விரைந்தான். மழையும், காற்றுமான அந்த நேரத்தில்தான் உதவி கோருவது கப்பலிலிருப்பவர்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காகத் தீவிலேயே மிகவும் மேடான ஓர் இடத்தில் போய் நின்று கூவினான் அவன். கூவியும் கைகளை ஆட்டியும் வெகுநேரம் முயன்றும் அந்தக் கப்பலில் இருந்தவர்கள் கவனம் அவன் பக்கம் திரும்பவில்லை. அவனுடைய கூக்குரலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. தோற்றத்தைத் தொலைவும் மழையும் தெரியவிடாமற் செய்துவிட்டன, ‘இன்னும் ஏதாவது கப்பல் வருகிறதா’ என்று கவனித்துக் கொண்டு அங்கேயே நின்றான் இளங்குமரன். கப்பல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/270&oldid=1142088" இலிருந்து மீள்விக்கப்பட்டது