பக்கம்:மணி பல்லவம் 1.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

மணிபல்லவம்

இளங்குமரனிடமிருந்து பதில் இல்லை.

“நான் கடலோடு சீரழிந்து இறந்து போயிருந்தால் உங்களுக்குத் திருப்தியாகியிருக்கும் இல்லையா?”

“...”

“என் கேள்வியை மதித்து எனக்குப் பதில் சொல்வது கூட உங்களுக்குக் கேவலம் போலிருக்கிறது?”

“...”

சுரமஞ்சரி எழுந்து நின்றாள். மெல்லிய விசும்பல் ஒலி அவள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து ஒலித்தது. இளங்குமரன் அதைக் கேட்டும் அசையாமல் கற்சிலை போல் அமர்ந்திருந்தான்.

எழுந்து நின்ற அவள் கடலை நோக்கி வேகமாக நடக்கலானாள். நடையில் பாய்ந்தோடும் வெறி, நெஞ்சில் தவிப்புக்கள், அதைக் கண்டு இளங்குமரனின் கல் நெஞ்சில் எங்கோ சிறிது கருணை நெகிழ்ந்தது. எழுந்து நின்று அவளைக் கேட்டான்.

“நில்! எங்கே போகிறாய்?”

“எங்கேயாவது போகிறேன்? எங்கே போனால் உங்களுக்கென்ன? உங்கள் மனத்தில்தான் எனக்கு இடம் கிடையாது! கடலில் நிறைய இடமிருக்கிறது.”

“இருக்கலாம்! ஆனால் நான் உன்னைச் சாகவிட மாட்டேன். நீ என்னால் காப்பாற்றப்பட்டவள். தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ உன்னைக் காப்பாற்றிவிட்டேன். என்னுடைய அன்பை நீ அடைய முடியாது; ஆனால் கருணையை அடைய முடியும்.”

சுரமஞ்சரி நின்றாள். அவனுக்குக் கேட்கும்படி இரைந்து சிரித்தாள்.

“அன்பில்லாமல் கருணையில்லை. எல்லையை உடையது அன்பு. எல்லையற்றது கருணை. அன்பு முதிர்ந்துதான் கருணையாக மலர வேண்டும். அன்பேயில்லாத உங்கள் கருணையை நான் அங்கீகரிப்பதற்கில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/273&oldid=1142092" இலிருந்து மீள்விக்கப்பட்டது