பக்கம்:மணி பல்லவம் 1.pdf/274

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

273

“உன்னிடந் தர்க்கம் புரிய நான் விரும்பவில்லை. உன் சிரிப்புக்கும் பார்வைக்கும் நான் தோற்று நிற்பதுதான் அன்பு என்று நீ நினைப்பதாயிருந்தால் அதை ஒருபோதும் என்னிடமிருந்து அடைய முடியாது. எனக்கு பொதுவாக இரக்கம் உண்டு. பொதுவான கருணை உண்டு. அது உன் மேலும் உண்டு. ஈ, எறும்பு முதல் எல்லா உயிர்கள் மேலும் உண்டு.”

“அப்படிக் கருணையையும், இரக்கத்தையும் பொதுவாகச் செலுத்தக் கடவுள் இருக்கிறார். நீங்கள் தேவையில்லை. மனிதர்கள், மனிதர்களிடமிருந்து, மனித நிலையில் எதிர்பார்க்கும் ஈரமும், பாசமும் இணைந்து குழைந்த உலகத்து அன்புதான் உங்களிடமிருந்து எனக்கு வேண்டும்.”

“அந்த அன்பை நான் உனக்குத் தருவதற்கில்லை.”

“வேறு யாருக்குத் தருவதாக உத்தேசமோ?”

“யாருக்குமே தருவதற்கில்லை. அந்த அன்பை என் தாயின் கால்களில் விழுந்து கதறுவதற்காகச் சேர்த்துக் கொண்டு வருகிறேன் நான். உலகத்திலேயே நான் அன்பு செலுத்துவதற்கு ஒருத்திதான் பிறந்திருக்கிறாள். அவள் யாரென்று எனக்கே தெரியவில்லை. அவளுக்காகத்தான் என் இதயத்தில் அன்பு தேங்கியிருக்கிறது. அவளுக்கு முன்னால்தான் நான் கண்ணில் நீர் நெகிழ “அம்மா” என்று குழைய முடியும். துரதிர்ஷ்டவசமாக அவள் யாரென்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. அவளைப் பார்க்கிறவரை நான் பார்த்துக் கொண்டிருக்கிற பெண்களெல்லாம் என் கண்களுக்கு அவளாகவே தெரிகிறார்கள்.”

“எனக்குத் தாய் இருக்கிறாள். ஆகவே அந்த வகையிற் கருணைக்குக் குறைவில்லை. ஆனால் தாயும், தந்தையும் செலுத்துகிற அன்பு மட்டும் இப்போது என் மனத்தை நிறைவு செய்யவில்லை? உங்களைப்போல் ஒருவருடைய மனத்திலிருந்து என்னைப்போல் ஒருத்தியின் மனம் எதையோ வெற்றி கொள்வதற்குத் தவிக்கிறதே.”

ம-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/274&oldid=1142094" இலிருந்து மீள்விக்கப்பட்டது