பக்கம்:மணி பல்லவம் 1.pdf/279

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

மணிபல்லவம்

எப்போதுமே மிகுந்த வனப்பு உண்டு. தன்மையும் மலர்ச்சியுமாக விடிந்த அந்தக் காலைப் போதில் இளங்குமரனும் சுரமஞ்சரியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. வெளியே எங்கும் குளிர்ச்சி, எங்கும் மலர்ச்சி. அவர்கள் இருவர் நெஞ்சங்களில் மட்டும் வெம்மையும், பிணக்கும் விளைந்திருந்தன. முதலில் இளங்குமரன்தான் துயில் நீங்கிக் கண் விழித்து எழுந்திருந்தான். அப்போது சுரமஞ்சரி எதிர்ப்புறமிருந்த வேறொரு மரத்தடியில் உட்கார்ந்த படியே சாய்ந்து கண்மூடித் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்பு வதற்காக அருகில் சென்று நின்று கொண்டு இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டி ஓசையுண்டாக்கினான் இளங்குமரன். அந்த ஓசையைக் கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றாள் அவள். எதிரே அவனைப் பார்த்ததும் கோபத்தோடு முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். சிறு குழந்தையைப் போல் சீற்றம் கொண்டாடும் அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டான் அவன்.

அவளுடைய கோலத்தையும், பிணக்கையும் பொருட்படுத்தாமல் நகரத்துக்குச் செல்லும் கப்பல்களைக் கூவியழைத்து ஏதாவது கப்பலில் இடம் பெற்றுக் கொள்ள முயல்வதற்காக மேட்டில் ஏறினான் இளங்குமரன். விரைவில் அவனது முயற்சி பயனளித்தது. பச்சைக் கற்பூரத்தையும் வளைகளையும், பட்டுக்களையும் ஏற்றிக் கொண்டு சீன தேசத்திலிருந்து பூம்புகார்த் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த சீனத்துக் கப்பல் ஒன்று இளங்குமரனின் கூப்பாட்டுக்குச் செவி சாய்த்தது. மாதக் கணக்கில் கடற்பயணம் செய்து துறைமுகத்தை அடைவதற்கிருந்த அந்தக் கப்பலில் சுரமஞ்சரிக்கும் இளங்குமரனுக்கும் இடம் கிடைத்தது. கப்பலுக்குள் ஏறிய பின்பும் இளங்குமரனும், சுரமஞ்சரியும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டுதான் இருந்தார்கள். கப்பல் நிறையக் கற்பூரம் மணந்து கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/279&oldid=1142102" இலிருந்து மீள்விக்கப்பட்டது