பக்கம்:மணி பல்லவம் 1.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

27

நின்றான். அடர்ந்த இருண்ட அந்தச் சூழலில் கண்களின் காணும் ஆற்றலையும், செவிகளின் கேட்கும் ஆற்றலையும் கூர்மையாக்கிக் கொண்டு நின்றான். அவன் எதிர்பார்த்தபடியே நடந்தது. கால் பக்கம் உதைப்பட்டு விழுந்தவன் எழுந்து இளங்குமரனைத் தாக்கப் பாய்ந்து வந்தான். இருளில் கனல் துண்டங்களைப்போல் தன்னைக் குறிவைத்து முன் நகரும் அவன் விழிகளைக் கவனித்தான் இளங்குமரன், மடக்கிக் கொண்டிருந்த தன் கைகளை உயர்த்தி, “இந்தா இதைப் பெற்றுக் கொள்; சம்பாபதி வனத்து மண் வளமானது, பழமையும் பெருமையும் வாய்ந்தது என்று கூறிச் சிரித்துக் கொண்டே விரல்களைத் திறந்து எதிர் வரும் கனற் கண்களைக் குறிவைத்து வீசினான். கண்களில் மண் விழுந்து திணறியவன் இளங்குமரன் நிற்குமிடம் அறியாது இருளில் கைகளை முன்நீட்டித் தடவிக் கொண்டு மயங்கினான். அப்போது மற்றொரு எதிரி எழுந்து வரவே, இளங்குமரன் அவனை வரவேற்கச் சித்தமானான். அவன் கைகளிலும், நெஞ்சிலும் வலிமை பெருக்கெடுத்து ஊறியது. தாயையும் முனிவரையும் சந்திக்க முடியாமையினால் சிதறியிருந்த இளங்குமரனின் நம்பிக்கைகள் பகைவனை எதிர்க்கும் நோக்கில் மீண்டும் ஒன்றுபட்டன. நாவல் மரத்தடியிலிருந்து எழுந்து வந்தவனும் இளங்குமரனும் கைகலந்து போரிட்டனர். எதிரி தான் நினைத்ததுபோல எளிதாக மடக்கி வென்று விட முடிந்த ஆள் இல்லை என்பது சிறிது நேரத்துப் போரிலேயே இளங்குமரனுக்கு விளங்கியது. வகையான முரடனாக இருந்தான் எதிரி. இரண்டு காரணங்களுக்காகப் போரிட்டவாறே போக்குக் காட்டி எதிரியைச் சம்பாபதி கோவில் முன்புறமுள்ள மங்கிய தீபத்தின் அருகே இழுத்துக் கொண்டுபோய்ச் சேர்க்க விரும்பினான் இளங்குமரன். முதற்காரணம்: ‘யார் என்ன தொடர்பினால் தன்னை அங்கே அந்த இரவில் கொல்லுவதற்குத் திட்டமிட்டுச் செய்வது போல தாக்குகிறார்கள்’ என்பதை அவன் நன்றாக இனங் கண்டு அறிந்து கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/28&oldid=1141624" இலிருந்து மீள்விக்கப்பட்டது